காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதி, இப்பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கான மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டிருப்பதை தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். காவிரி டெல்டாவில் அனைத்து நாட்களிலும் நெல், கரும்பு போன்ற பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது என்பது விவசாயத்தை முற்றிலுமாக அழிக்க மத்திய அரசின் சதி என தெரிகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் டெல்டா மாவட்டங்களை கடுமையாகப் பாதிப்பதுடன், உணவுப் பாதுகாப்பையும், விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். தமிழக அரசின் ஒப்புதலின்றி இதைசெயல்படுத்துவது, மாநில உரிமையை மீறிய செயலாகும்.
மத்திய பாஜக அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதை தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டுமென திமுக அரசுக்கும், தமிழக முதலமைச்சருக்கும் தொடர்ந்து விவசாய பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை சிறிதும் தாமதப்படுத்தாமல் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டுமென பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியதோடு மட்டுமில்லாது, தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று சட்டப்பேரவையில் உறுதியளித்திருப்பதை தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.