ஜி.கே. மணி அவர்கள், மகளிர் உரிமைத் தொகை பற்றிப் பேசுகிறபோது, மனந்திறந்துப் பாராட்டினார்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு
உறுப்பினர் திரு. ஜி.கே. மணி அவர்கள், மகளிர் உரிமைத் தொகை பற்றிப்
பேசுகிறபோது, மனந்திறந்துப் பாராட்டினார். ஆனால், அதே நேரத்தில்,
கிடைக்காதவர்களின் நிலை என்ன என்று ஒரு கேள்விக்கணையையும் அவர்
தொடுத்து, அந்தப் பிரச்சினையையும் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறார். இது
இந்த அவையிலே மட்டுமல்ல; வெளியிலேயும், அதிலும் குறிப்பாக,
பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும், அதையும் தாண்டி, பல
சமூகவலைதளங்களிலும் இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் – இதைப்பற்றி
விமர்சனங்கள் செய்தும், பாராட்டியும், புகழ்ந்தும் தொடர்ந்து பேசியும்,
எழுதியும் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் ஒரு நீண்ட விளக்கத்தை
நான் இந்த அவையில் பதிவு செய்வது என் கடமையென கருதுகிறேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, சுயமரியாதைக்
கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் அறிவுச்சுடர் பேரறிஞர்
பெருந்தகை அண்ணா, நவீன தமிழகத்தைக் கட்டமைப்பதில் நம்முடைய
தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆகியோர் வகுத்தளித்த

2

பாதையில், தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாக
உருவாக்கிடவும், அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாகத்
திகழ்ந்திடச் செய்திடவும், நாள்தோறும் எண்ணற்ற மக்கள்நலன் சார்ந்த
திட்டங்களை நமது அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதை இந்த மாமன்ற
உறுப்பினர்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

சமூகம், அரசியல், பொருளாதாரம், மக்கள் மேம்பாடு அனைத்திலும்
நவீனமயம் என்கிற திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம்.
ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தேர்தல் அறிக்கையில் தெரிவித்த
வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் வகையிலான அறிவிப்புகளை
மட்டுமல்லாமல், அறிவிக்காத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு
செயல்படுத்தி வருகிறது என்பதை இந்தப் பேரவையில் உள்ள மாண்புமிகு
உறுப்பினர்களும், இந்த நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.

அந்தவகையில், இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், இந்த
நூற்றாண்டின் மகத்தான திட்டமான ‘மகளிர் உரிமைத் தொகை’ குறித்த
அறிவிப்பு வெளியாகி, நாடெங்கும், ஏன், உலகெங்கும் இருக்கக்கூடிய
பொருளாதார வல்லுநர்கள் அனைவருடைய கவனத்தையும் அது ஈர்த்துள்ளது.
இந்த மாபெரும் திட்டத்தினைச் செயல்படுத்தும்விதம் குறித்தும், அதில் பயன்
பெறப்போகக்கூடிய குடும்பத் தலைவிகளின் தேர்வு குறித்தும், இம்மாமன்ற
உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துகளையொட்டியும், அதற்குத்

3

தேவையான விளக்கத்தை இந்த அவையில் நான் பதிவு செய்வது என்
கடமையாகக் கருதுகிறேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே,

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால், தாய்வழிச் சமூக
முறைதான் மனிதகுலத்தை முதலில் வழிநடத்தி வந்திருக்கிறது என்ற உண்மை
தெரியவரும். உழவுக் கருவிகளைக் கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக
மாறியபோதுகூட, பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே
அமைந்திருந்தது. ஆனால், காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான
மரபுகளின் பெயராலும், பல்வேறு ஆதிக்க வர்க்கத்தாலும் பெண்கள் வீட்டுக்குள்
முடக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கல்வியறிவு மறுக்கப்பட்டது.
பெண்குலத்தின் உழைப்பு நிராகரிக்கப்பட்டது. பூட்டிய இரும்புக் கூட்டின்
கதவினைத் திறந்து, பெண் அடிமைத்தனத்தைத் தகர்த்து, அவர்களுக்கான
சமூக, பொருளாதார சுதந்திரத்தை மீட்க எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள்
முன்வந்தாலும், இருபதாம் நூற்றாண்டினுடைய தந்தை பெரியாரின்
சுயமரியாதை இயக்கமே வீறுகொண்ட போராட்டங்களின் மூலமாக பெண்
விடுதலைக்குப் பாதை அமைத்தது. நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி, கடந்த ஒரு
நூற்றாண்டு காலம் திராவிட இயக்கம் அயராது பணியாற்றியதன் விளைவு,
இன்று பள்ளி, கல்லூரிப் படிப்புகளில் மாணவிகள் அதிகம் நுழைந்துள்ளார்கள்.

4

அதுமட்டுமல்ல; அவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குவதைப்
பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அரசுப் பணியாளர் தேர்வுகளில்
பெண்கள் அதிகம் தேர்ச்சி பெறுவது தமிழ்ச் சமூகத்தின் முதிர்ச்சியைக்
காட்டுகிறது. இன்றளவும் ஏழை மக்களின் குடும்பங்களிலும், கிராமப்
பொருளாதாரத்தைச் சுமக்கும் முதுகெலும்பாகவும் பெண்கள் இருக்கிறார்கள்
என்பது மறுக்க முடியாத உண்மை. வேலையிலும், ஊதியத்திலும், சமூகப்
பொறுப்பில் இடைவெளியும், வேறுபாடும் ஒருசில இடத்தில் இருந்தாலும்,
ஆணின் உழைப்புக்கு எந்தவிதத்திலும் பெண்கள் குறைந்தவர்கள் அல்லர்
என்பது நம் கண்முன்னால் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, சமூகத்தில் வெற்றி
பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்று
கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற
பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், தன் தாய்,
சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப் பெண்களுடைய பல மணிநேர
உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது?
(மேசையைத் தட்டும் ஒலி) ஒரு ஆணின் வெற்றிக்காகவும், தங்கள்
குழந்தைகளின் கல்வி, உடல்நலம் காக்கவும் இந்த சமூகத்திற்காகவும்
வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரங்கள் அவர்கள்
உழைத்து இருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு இருந்தால்,

5

இந்நேரம் நம் நாட்டில் குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள்
பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.

இப்படிக் கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக
அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அங்கீகரித்தால், ஆண்களை உள்ளடக்கிய
இந்தச் சமூகமும் பெண்களுக்கான சமஉரிமையை வழங்கிடும் நிலை விரைவில்
உருவாகிடும் என்று நமது அரசு உறுதியாக நம்புகிறது. எனவேதான், இந்தத்
திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர்
உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, Universal Basic
Income என்ற பெயரில் உலகில் பல நாடுகளில் சோதனை முறையில்,
குறிப்பிட்ட சில பகுதிகளில், ஒரு சில சமூகப் பிரிவினரிடம் மட்டும் இந்தத்
திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்படிப் பரிசோதனை
அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தின் மூலமாகவே, பல
குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம், வறுமை பாதியாகக்
குறைந்திட வாய்ப்பு உண்டு என்றும், கிடைக்கும் நிதியைப் பெண்கள் தங்கள்
குழந்தைகளின் கல்விக்கும், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவச்செலவு செய்திடவும்

6

முன்னுரிமை தருகிறார்கள் எனவும், சிறு சிறு தொழில்களைச் செய்ய
முன்வருகிறார்கள் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்துக்கும் மேலாக, தன்னம்பிக்கை பெறுள்ளார்கள் என்றும்
சொல்லப்படுகிறது. பரிசோதனை முயற்சியாக உலகில் சில நாடுகளில்
ஆங்காங்கே நடைமுறைப்படுத்திய திட்டத்திற்கே இவ்வளவு பயன்கள்
கிடைக்கின்றன என்றால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போகும் இந்த
மாபெரும் முயற்சி, எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கப் போகும்
பயன்களை, இந்த மாமன்ற உறுப்பினர்கள் ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க
வேண்டுகிறேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இந்த ‘மகளிர்
உரிமைத் தொகை’ வழங்கும் திட்டத்திற்காக, இந்த நிதிநிலை அறிக்கையில்
ஏழாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதையொட்டி, எவ்வளவு பேர்
பயன்பெறுவார்கள் என்று பலர் மனக்கணக்குப் போட்டு வருகிறார்கள்
என்பதை நாம் பார்த்து வருகிறோம். இதுகுறித்து என்னுடைய கருத்தைப் பதிவு
செய்வதற்கு முன்னால், ஒன்றை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஊடகம்
ஒன்றில், "இந்தத் திட்டத்தின் உதவியைச் செல்வந்தர்களுக்கும், வருமான வரி
செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் கொடுக்கலாமா?"
என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ‘இல்லாத ஏழை மக்களுக்குக்

7

கொடுத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும்’ என்று ஒரு பெண்மணி பதில்
சொல்கிறார்.

இந்தத் திட்டம் யாருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று
பொதுமக்களுக்கே தெரிகிறது. ‘பகிர்தல் அறம்’ என்றும்; ‘பசித்துண்டு பல்லுயிர்
ஓம்புதல்’ என்றும்; தமிழ் மரபின் தாக்கத்தால் உருவான நலத் திட்டங்களின்
நோக்கமும், தேவையானவர்களுக்குத் தேவையான உதவியை, உரிய நேரத்தில்
தேடித் தேடி வழங்குவதில்தான் இருக்கும். ‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டம்
அறிவிக்கப்பட்டால், வீடு இல்லாதவர்களுக்கு ஓர் கனவு இல்லம் அமைத்துத்
தருவது என்று பொருள். ‘அனைவருக்கும் நிலம்’ என்றொரு திட்டம் என்றால்,
நிலமற்ற கூலித் தொழிலாளர்கள், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம்
என்பதுதான் அடிப்படை நோக்கம். ‘முதியோர் ஓய்வூதியம்’ என்றால்,
ஆதரவற்ற முதியோரின் நலன் காக்க முனையும் திட்டம் என்று பொருள்.
அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் என்றால்,
வேலைவாய்ப்பற்றவர்களுக்கு முன்னுரிமை என்று பொருள்.

அந்தவகையில், இந்த ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ இரண்டு
நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல்
உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும்
அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய்
உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக

8

இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,
சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க
வேண்டும் என்பதாகும்.

மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக
அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப்படும் குடும்பத்
தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச்
செலுத்தப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) நடைபாதையில் வணிகம்
செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ
மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம்
மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர்,
ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள்
என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து
வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள். (மேசையைத்
தட்டும் ஒலி) இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில்
வெளியிடப்படும்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இதனைச் செய்ய
முடியுமா? இதற்கு நிதி இருக்குமா என்றெல்லாம், கேள்விகளை எழுப்பி, எங்கே
திராவிட முன்னேற்றக் கழக அரசு இதனைச் செய்துவிடுமோ என்ற தங்கள்
அச்சத்தை பல்வேறு வகைகளிலே வெளிப்படுத்தி வந்தவர்களுக்கு

9

பதிலளிக்கக்கூடிய விதமாக, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதி
திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில் விளங்கவுள்ள,
இந்த மகத்தான ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு
கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில்
அமைந்திடும் (மேசையைத் தட்டும் ஒலி) என்பதை இந்த மாமன்றத்தில் மிகுந்த
பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகத்தின் சரிபாதியான பெண்களுக்குச் சமூக விடுதலை பெற்றுத்
தந்தது திராவிட இயக்கம் என்றால், பொருளாதாரச் சமத்துவத்தை
வழங்குவதுதான் திராவிட மாடல் அரசு என்பதை நான் நினைவூட்ட
விரும்புகிறேன். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வை சிறிதேனும்
மாற்றிவிடும் என நம்பும் எந்தக் குடும்பத் தலைவியையும், மனிதநேய
அடிப்படையிலான பெண் உரிமை காக்கக்கூடிய எனது தலைமையிலான
திராவிட முன்னேற்றக் கழக அரசு கைவிட்டுவிடாது என்ற உறுதியை நான்
இந்த மாமன்றத்தில் தெரிவித்து அமைகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *