சென்னை மெரினா இணைப்பு சாலையில் போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெறுகிறது. சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம் என மீனவர்களிடம் அறிவுறுத்த வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் வலியுறுத்தினார்.
சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாகம் வரை உள்ள லூப் சாலையில் மீன் கடைகள் ஆக்கிரமித்து உள்ளதாகக் கூறி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, லூப் சாலையின் ஓரத்தில் “ஆக்கிரமித்திருக்கும் மீன் கடைகளை ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும்” என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது.சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் லூப் சாலையில் செயல்படும் மீன் கடைகளை அகற்றிவிட்டு ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு மெரினா லூப் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுயநலவாதிகள் தூண்டுதல் பேரில் போராட்டம் நடத்தி மெரினாவில் போக்குவரத்தை முடக்குவதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம் என மீனவர்களிடம் அறிவுறுத்த வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் வலியுறுத்தினார்.
இதனை அடுத்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்; மீனவர்கள் எதிர்ப்புக்கு இடையே 75 மீன்கடைகள், 15 குடிசைகள், 12 பெட்டிக்கடைகள், உணவகங்கள் மற்றும் நடமாடும் உணவகங்கள் போன்ற ஆக்கிரமிப்புக்களும் அகற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையரின் விளக்கத்தை அடுத்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் கலங்கரை விளக்கம் அருகே மீன்சந்தை அமைக்கும் பணிகள் முடியும் வரை மேற்கு பக்கம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும் என மாநகராட்சி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.