சென்னை: சென்னையில் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் பைக் டாக்ஸி சேவை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையங்களில் இயக்கப்படுகிறது. தேவை மற்றும் சேவை அடிப்படையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது. பெண்களால் இயக்கபடும் 50 பைக்குகள் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான இணைப்பு வாகன சேவை வழங்குவதே நோக்கம் எனவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், விரைவாக, சொகுசாக செல்ல முடிவதால், சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது தினமும் 2.10 லட்சம் முதல் 2.50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதுவரையில் இல்லாத அளவுக்கு, கடந்த மாதத்தில் மொத்தம் 69.99 லட்சம் பேர், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பாக செல்லும் வகையில், பெண்களே இயக்கும் பைக் டாக்ஸி சேவை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.