சென்னை: ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீசியது. ஹாரி புரூக், அபிஷேக் இணைந்து ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்தது. புரூக் 18 ரன் எடுத்து ஆகாஷ் பந்துவீச்சில் ருதுராஜ் வசம் பிடிபட்டார். அடுத்து அபிஷேக் – திரிபாதி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்தனர்.
அபிஷேக் 34 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), திரிபாதி 21 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஜடேஜா சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ஐதராபாத் திடீர் சரிவை சந்தித்தது. கேப்டன் மார்க்ரம் 12 ரன் எடுத்து தீக்ஷனா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தோனி வசம் பிடிபட்டார். அகர்வால் 2 ரன் மட்டுமே எடுத்து ஜடேஜா சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட… ஐதராபாத் 13.5 ஓவரில் 95 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து மேலும் பின்னடைவை சந்தித்தது. கிளாஸன் 17 ரன் எடுத்து பதிரணா பந்துவீச்சில் ருதுராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, சுந்தர் 9 ரன் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட்டானார்.ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்தது. ஜான்சென் 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை பந்துவீச்சில் ஜடேஜா 3, ஆகாஷ், தீக்ஷனா, பதிரணா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 135 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கான்வே 77* ரன் (57 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), ருதுராஜ் 35 ரன் (30 பந்து, 2 பவுண்டரி) விளாசினர். சென்னை அணி 6 போட்டியில் 4வது வெற்றியை வசப்படுத்தியது (8 புள்ளி).