சூடான்: சூடான் உள்நாட்டு சண்டையின் போது இந்தியர்கள் 3000 பேர் அங்கு சிக்கி தவித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் அங்கு சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த சுமார் 200 பேர் அங்கு சிக்கி இருப்பதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மீட்புப்பணிகள் குறித்து தூதரக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்களை குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட முடியாது எனவும் வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் சூடான் நாட்டில் சிக்கியுள்ளனர். அங்கே கடுமையான சண்டை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் யாரும் தங்கள் தங்கி இருக்கும் இடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை அளித்துள்ளது.
அந்த நாட்டின் தலைநகரில் உள்ள இந்திய தூதரகம் அங்கு சிக்கியுள்ள இந்திய மக்களுக்கு அறிவுரைகளை அளிக்க முயற்சி செய்து வருகிறது. எதற்காகவும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் உணவு, தண்ணீர் போன்றவற்றிற்கு தட்டுபாடு ஏற்பட்டால் அதை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் இருந்து பெற்று அதன் மூலமாகவே சமாளிக்க வேண்டும் எனவும் வெளியே செல்வது சரியாக இருக்காது எனவும் அறிவுறுத்தபட்டுள்ளது.
அங்கே ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே கடுமையான மோதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மோதல் இடைக்காலமாக நிறுத்திவைக்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தாலும். இன்னும் அமைதி திரும்பவில்லை ஆகவே அமைதியான சூழல் ஏற்படும் போது மக்கள் அங்கிருந்து வெளியேறலாம் என்றும், அதுவரை தங்கியிருக்கும் இடங்களிலேயே பத்திரமாக இருக்கவேண்டும் என்றும், கேட்டுக்கொண்டுள்ளது.
இதை தவிர மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை சேர்ந்த அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அவர்கள் உதவியுடன் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை அங்கிருந்து மீட்க நடவடிக்கைகளை எடுக்கலாம் என ஆலோசனை நடைபெற்று கொண்டிருக்கிறது.