சென்னை: 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது திருநங்கை பி. ஐஸ்வர்யா அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்காக 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பி. ஐஸ்வர்யா அவர்களுக்கு வழங்கினார்.
திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவைபுரிந்து, அவர்களுக்குள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ஆம் நாளில் அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு சிறந்த திருநங்கை விருது கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் திருநங்கைக்கு 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக தனது கிராமியம் மற்றும் நாடக கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பி. ஐஸ்வர்யா அவர்களின் சிறந்த சேவையை பாராட்டி, தமிழ்நாடு அரசின் 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை திருநங்கை பி. ஐஸ்வர்யா அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி பாராட்டினார்.