சென்னை: சிபிசிஐடி விசாரணையில் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான உண்மை வெளிவரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், கோடநாடு கொலை, கொள்ளை நடந்தது அதிமுக ஆட்சியில்தான். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் தடுமாற்றம் என கேள்வி எழுப்பினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த பங்களாவில் கொலை, கொள்ளை நடந்துள்ளது.
கோடநாடு பங்களாவில் மர்மமான முறையில் கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்து எல்லாம் நடந்திருக்கின்றது. பழனிசாமி ஆட்சியிலேயே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் வழக்கை விரைந்து முடித்து இருக்க முடியும். இப்போது எதிர்கட்சி தலைவர் கோரிக்கை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதா அம்மையாரின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களை அவரின் கட்சியின் முதலமைச்சராக இருந்தவரே மறைக்க முற்படுகிறார்.
அப்படி நடக்கும் போது, திமுக எப்படி சும்மா இருக்க முடியும்? என்று சாடினார். கோடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை கோருவேன் என்று தற்போது பழனிசாமி கூறுகிறார். முதலமைச்சராக இருந்தபோது பழனிசாமி மீது புகார் கூறிய பத்திரிகையாளரை அச்சுறுத்தி வழக்கு போட்டனர். கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளி யார் என்பது சிபிசிஐடி விசாரணையில் நிச்சயம் வெளிவரும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.