சினிமா அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி நடிகை கீர்த்தி சுரேஷ்

எனக்கு சவாலாக அமைந்த கதாபாத்திரம் – நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் சாதாரண நடிகையாக அறிமுகமாகி, `நடிகையர் திலகம்’ படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், முதல் தர நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். சினிமா அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் இருந்து…
“நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான `நடிகையர் திலகம்’ படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்ததும் கடுமையான கேலிக்கு உள்ளானேன். `இவரால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா?’ என்று பேசினர். படப் பிடிப்பு முடிந்த பிறகுதான் அந்த விமர்சனங்கள் எனது கவனத்துக்கு வந்தன. கேலி, விமர்சனங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு பார்த்தால் அந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்.
முதலில் `நடிகையர் திலகம்’ படத் தில் நடிக்க நான் மறுப்பு சொன்னேன். சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் பயந்தேன். சாவித்திரிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? என்ற தயக்கமும் இருந்தது. ஆனால் இயக்குனர் நாக அஸ்வின் என்னை ஊக்கப்படுத்தினார். `இந்த கதாபாத்திரத்தை உன்னால் செய்ய முடியும்’ என்று தைரியம் கொடுத்தார்.
அவரே என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்தபோது என்னை நான் ஏன் நம்பக் கூடாது என நினைத்துதான் அந்த படத்தில் நடித்தேன். சாவித்திரி மகளிடம் பேசி அவரை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டு நடித்தேன். அந்த கதாபாத்திரத்தில் நடித்தது பெரிய சவாலாகவும் இருந்தது.
படத்தை முடித்த பிறகு ஒருவர் `சாவித்திரி வேடத்தில் நடித்ததற்காக உங்கள் மீது வரும் விமர்சனங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டபோதுதான் என்னை கேலிசெய்தது பற்றி தெரிந்து கொண்டேன். சமூக வலைதளத்தில் எனக்கு எதிராக எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன. நான் அவற்றை அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டேன். கண்டுகொள்ள ஆர்வமும் காட்ட மாட்டேன். அதனால் தான் கேலி, விமர்சனங்கள் என் கவனத்துக்கு அதிகம் வருவது இல்லை. இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. நல்ல கதை கிடைத்தால் நிச்சயமாக இந்தியில் நடிப்பேன். இந்தி நடிகர்களில் ஷாருக்கான் என்றால் எனக்கு பைத்தியம். அவரோடு நடிக்கும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் விட மாட்டேன். ஒரு முறையாவது அவரோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.” இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *