சமூகநீதி தத்துவத்தை பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் – மு.க.ஸ்டலின் பேச்சு

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் சலுகைகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். சென்னை, பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இந்து மதத்தில் இருந்து வேறு மதம் மாறியவர்கள் பட்டியலின சாதிகளில் இணைய முடியாது. ஆனால், சீக்கியம் மற்றும் பவுத்த மதம் மாறியவர்களை பட்டியலின சாதிப்பட்டியலில் சேர்த்து முறையே 1956, 1990 ஆண்டுகளில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது; இதே போன்ற திருத்தம்தான் கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களும் எதிர்பார்க்கின்றனர்.
வரலாற்று ரீதியாகவே ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமையை வழங்குவதே சரியானது. மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் ஜாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. ஜாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே ஜாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம்.
ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை கொடுமை தொடர்கிறது. சமூகநீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *