சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சட்டசபை கதவுகள் மொத்தமாக பூட்டப்பட்டன.

இன்று ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சட்டசபை கதவுகள் மொத்தமாக பூட்டப்பட்டன.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். சட்டசபையில் இன்று காலை தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்புடையதாக இல்லை, என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.சட்டசபை மாண்புகளை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் . சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.முக்கியமாக ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று தனி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதி உள்ளது. சட்டசபையில் ஆளுநர் பற்றி விவாதிக்க கட்டுப்பாடு உள்ளது. அதனால் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால், அதற்காக விதிகளை தளர்த்த வேண்டும். இதையடுத்து இன்று அவையில் ஆளுநரை பற்றி விவாதிக்க கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தார் அவை முன்னவர் துரைமுருகன். அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பொதுவாக குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதாவது ஆதரிப்பவர் ஆம் என்க.. எதிர்ப்பவர் இல்லை என்க என்று கூறுவார். இதை எதிர்த்து குரல் வந்தால்.. எதற்கு ஆதரவாக குரல் வருகிறது என்று பார்க்கப்படும்.ஆனால் இன்று ஆளுநர் பற்றி விவாதிக்க கூடாது என்ற விதியை தளர்த்தும் தீர்மானத்திற்கு குரல் வாக்கெடுப்பிற்கு பதிலாக உறுப்பினர்கள் எழுந்து நிற்பார்கள். அவர்களின் தலைகள் எண்ணப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். அதாவது எதிர்ப்பவர்கள் எழுந்து வாக்களிக்க வேண்டும். ஆதரிப்பவர்கள் எழுந்து தனியாக வாக்களிக்கலாம். நடுநிலை முடிவில் இருப்பவர்களும் அப்படி வாக்களிக்கலாம். இவர்களின் தலைகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 2017க்கு பின் முதல்முறையாக இன்று இப்படி தமிழ்நாடு சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எப்போதும் தலை வாக்கெடுப்பு நடத்தும் போது அவை கதவுகள் அடைக்கப்படும். இன்றும் இதன் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்காக பேரவை கதவுகள் அடைக்கப்பட்டன. பொதுவாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போதெல்லாம் இப்படி கதவு அடைக்கப்படும். அதேபோல் இன்று கதவை அடையுங்கள்.. காவலர்களே என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய சபாநாயகர் அப்பாவுவிடம் பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கதவை அடைக்கும் முன்பே வெளியேறிவிட்டதால் அவர்கள் அவையில் இல்லை.சமீபத்தில் குடிமைப்பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்துள்ளார் . சட்டசபையில் இன்று காலை தனித்தீர்மானம் கொண்டு வந்தார்முதல்வர் ஸ்டாலின். சட்டசபை மாண்புகளை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் . சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *