சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறக்கூடிய கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சென்னை, தமிழ்நாடு சட்டசபையில் அவை கூடிய பின்னர் கேள்வி நேரம் நேரலை செய்யப்படும். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் அளிக்கும் பதில்கள் இந்த நேரலையில் இடம்பெறும். இதைத் தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்படும்.அதன்படி இன்று விருத்தாலசத்தில் 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.இது குறித்து எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் தான் கேள்வி எழுப்பிய போது நேரலை நிறுத்தப்பட்டதாகவும், முதல்-அமைச்சர் அளிக்கும் பதில்கள் நேரலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும் எதிர்கட்சியினர் எழுப்பும் கேள்விகளை ஒளிபரப்பாமல் அமைச்சர்கள், முதல்-அமைச்சர் பதில் சொல்வதை மட்டுமே ஒளிபரப்புவதாக குற்றம் சாட்டி அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.இது தொடர்பாக சட்டசபையில் விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறக்கூடிய கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என்று தெரிவித்தார். மற்ற விவகாரங்களில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று அவர் கூறினார்.