கே.வி.அழகிரிசாமி அவர்களின் நினைவு நாளில் கி.வீரமணிஅறிக்கை

மறைந்த அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்களின் நினைவு நாளில் (மார்ச் 28), தலைமைக்கும், கொள்கைக்கும், இயக்கத்திற்கும் அவர் விசுவாசமாக, கட்டுப்பாடாக நடந்துகாட்டிய முறையை, இளைஞர்கள் பின்பற்றவேண்டும் என்ற சூளுரையை மேற்கொள்வோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திராவிடர் இயக்க வரலாற்றில், சுயமரியாதை இயக்க வளர்ச்சியில் தளபதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் தொண்டறமும், பிரச்சாரப் போர் முறையும் ஒப்புவமையற்ற ஒன்றாகும்!
அவருடைய நினைவு நாள் இன்று (மார்ச் 28).

அஞ்சாநெஞ்சன் அழகிரியின் கழகக் கட்டுப்பாடு!
ஒரே தலைமை, ஒரே கொள்கை, எவ்வளவு சோதனைகளும், காசநோய் போன்ற கொடுமைகள் இறுதிக் காலத்தில் அவரை வாட்டியபோதும், நிலைகுலையாதது மட்டுமல்ல, தனது தலைவர் தந்தை பெரியாரிடம் அவருக்குக் கருத்து வேறுபாடு இருந்ததுபோல் காட்டிடும் ஒரு முயற்சியை, திராவிடர் கழகத்தைவிட்டு அப்போது வெளியே வந்த சிலர் முயற்சித்தபோது, அவர்களை வெட்கப்படும்படி செய்தவர். அவர் மரணத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த நிலையிலும், சபலமோ, சலனமோ, சஞ்சலமோ சிறிதும் கொள்ளாத உறுதிமிக்க பெரியார் தொண்டனாக, பெரியாரின் தோழனாகத் திகழ்ந்தவர். இயக்க வளர்ச்சிக்கு இவர்போல் உழைத்தவர் எவர் உண்டு என்பதை இன்னமும் சரித்திரம் பதிய வைத்துள்ளது!
புத்தம் சரணம்,
தம்மம் சரணம்,
சங்கம் சரணம்,
தனது தலைவன்,
தமது கொள்கை,
தமது இயக்கம்
இம்மூன்றையும் தனது மூச்சிருக்கும் வரை துளிகூட மாறாது கடைப்பிடித்து, பின்பற்றி, விசுவாசம் – கட்டுப்பாடு குலையாது நடக்க – தன்னைப் பின்னுக்குத் தள்ளி, தனது தலைவனையே, தலைமையையே, தந்தை பெரியாரையே முதன்மைப்படுத்திய ஒரு மகத்தான ஒப்புவமையற்ற உணர்வுள்ள சுயமரியாதை இயக்கத் தளநாயகராக, தன்னேரில்லாத் தகைமையாளராக, இயக்கத்தை தனது வாழ்வுக்கோ, வசதிக்கோ பயன்படுத்தத் துளியும் விரும்பாத, தூய்மைமிகு தொண்டறத் தோழனாகவே கண்மூடும்வரை கடமையாற்றிய கைமாறு கருதாத சுயமரியாதைச் சுடரொளி!
அவரது தன்னல மறுப்பை, தகத்தகாய கொள்கைப் பிரச்சார ஒளியை இன்றைய இளைய தலைமுறையும், இனிவரும் தலைமுறையும் பொதுவாழ்க்கைப் பாடங்களாகப் படித்தால், படிக்கும் இவர்கள் பக்குவமும், பண்பும் பெறுவார்கள் என்பது நிச்சயம்!

பிரச்சார பயணத்துக்குத் தந்தை பெரியார் கடைப்பிடித்த அணுகுமுறை!
சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் – பரப்புரை அக்காலத்தில் எப்படி நடைபெற்றது என்பதை இக்கால வசதி தேடும் நம்மைப் போன்ற பிரச்சாரகர்கள் அறியவேண்டிய இன்ப அதிர்ச்சியூட்டும் இரண்டு முக்கிய செய்திகள்.
1. தந்தை பெரியார் அவர்கள் திருச்சி மாளிகையில், கட்டிலில் அமர்ந்திருந்தபோது, என்னை அழைத்துக் காட்டி விளக்கிய அரிய வாய்ப்பு.
S.I.R. ரயில்வே என்ற கம்பெனியில் (தனியார் ரயில், ரயில்வே)மொத்த கூப்பன் டிக்கெட் புத்தகங்களை 30 ரூபாய், 60 ரூபாய் என்று அய்யா வாங்கி, (மாத சாப்பாடு கூப்பனை ஓட்டலில் சாப்பிடக் கிழித்துக் கொடுப்பதுபோல) ரயிலில் பயணம் செய்யும் மைல்களுக்கு ஏற்ப கட்டணமாகத் தராது, இந்த Prepaid டிக்கெட் ரசீதுகளைக் கிழித்துத் தந்துவிட்டுப் பயணம் செல்லும் முறை –
அதை சுயமரியாதை இயக்கப் பிரச்சாரகர்கள் பயன்படுத்த, தந்தை பெரியாரே வாங்கி தம் செலவில் அனுப்புவார்.

தான் பேசும் கூட்டத்திற்குத் தானே தமுக்கடித்துப் பிரச்சாரம் செய்த பெருமகன்!
2. ஊர்க்கடை வீதியில், மக்கள் கூடும் பகுதியில் தமுக்கு (Tom Tom) ‘டாம், டாம்‘ ஒன்றினை கழுத்தில் போட்டுக்கொண்டு ஒருவர், ‘’இன்று மாலை 6 மணிக்கு …………….. திடலில் சுயமரியாதைச் சங்கப் பொதுக்கூட்டம் நடைபெறும். அதில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி பேசுவார்!’’ (சில ஊர்களில் இவருடன் பூவாளூர் பொன்னம்பலமும் பேசுவார்!)
‘’மஹாஜனங்களே, அனைவரும் திரண்டு வருகை தாருங்கள்’’ என்று பலமுறை காலையில் கூவிக் கூவிச் செல்லுவார்.
மக்கள் மாலையில் திரண்டு கேட்கும்போது, ‘’இவரை நாம் பார்த்ததுபோல் உள்ளதே’’ என்று சிலர் பேசிக் கொள்வர்.
காரணம், தமுக்கடித்து அறிவிப்புச் செய்தவர்தான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி, பூவாளூர் பொன்னம்பலனாராக இருப்பார்கள்!

இயக்கப் பிரச்சாரகர்களின் புரவலர்கள் முடிதிருத்தும் தோழர்கள்!
பலவிடங்களில் அவர்களுக்கு (ஏன் எங்கள் மாணவப் பிரச்சார காலங்களிலும்கூட) பார்பர் ஷாப்பும், முடிதிருத்தும் கொள்கையாளர்களுமான நம் தோழர்களும்தான் பிரச்சாரகர்களின் ‘’புரவலர்கள்!’’
உணவு, தங்குமிடம், ஓய்வுக்கூடம் எல்லாமே அவர்களது முடிதிருத்தகமே!
எவ்வளவு எளிமையும், கொள்கையும் இணைந்து பூத்துக் குலுங்கின பார்த்தீர்களா?
இப்படிப் பிரச்சாரத்தின்போது, வைதீகபுரியும், ஆரியமும் கூட்டணி அமைத்துக் கல்லெறிந்து கடுஞ்சொல்லெறிந்து தந்த ‘’புதுவகை வரவேற்பு’’தான் அவர்களுக்கு அக்காலத்தில் அதிகம்!
தளபதி அண்ணன் அழகிரிசாமி பேசுவாராம்!
‘’ஏ, தோழா! உனது கோட்டை சரிகிறது என்பதற்கு அடையாளம்தான் நீ என்மீது எறிந்த கல்!
ஒவ்வொரு கல்லும் அழகிரியே உரத்துப் பேசு, உரத்து மேலும் ஓங்கிப் பேசு என்றுதான் கூறும், மறவாதே!
ஏ, ஆரியமே! உன் சமாதியை இக்கல்லைக் கொண்டே கட்டச் சொல்லித்தான் உன் உறவுக்காரர்கள் இதனை எமக்கு அனுப்பியுள்ளார்கள்!
ஈட்டி எட்டிய வரையில் பாயும்,
பணம் பாதாளம் வரையில் பாயும்,
எங்கள் தலைவர் பெரியார் இராமசாமியின் கொள்கைகளோ, அண்ட பிண்ட சராசரங்களுக்கும் பாய்ந்து, அதற்கப்பாலும் பாயும் – கவனமிருக்கட்டும்!’’ என்பார்.
என்னைப் போன்ற அக்கால இளைஞர்களுக்கு தளபதி அழகிரியின் ராகம் போட்டப் பேச்சு, வீணையின் நரம்பு இசை நாதமாகவே காதில் ரீங்கரித்து, கொள்கைத் தேனை வந்து பாயச் செய்தது!
என்னே பேறு, யாம் பேற்ற பேறு! பேறு!!

‘’இருமுறை சந்தித்தேன் – தட்டிக் கொடுத்தார்!’’
தளபதி அஞ்சாநெஞ்சன் அவர்களை, மாணவப் பருவத்தில், நான் இரண்டுமுறை சந்தித்து, அவர் என்னை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்திய நிகழ்ச்சிகளை மறவேன்.
ஒன்று குடந்தையில், திரு.இரத்தினம் அவர்களது தேவி நாடக சபையாரால், பாவலர் பாலசுந்தரம் அவர்கள் எழுதிய ‘பராசக்தி’ நாடகம் பல வாரங்கள் நடந்தது. (அதில் பிரதான நடிகர்களில் ஒருவர் எம்.என்.நம்பியார்; பிறகு திரைப்பட வில்லன்).
பாவலர் பாலசுந்தரனார் அவர்கள், நாடகக் கொட்டகையில் என்னை அண்ணன் அழகிரி அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பிறகு, புதுவையில் கலைஞர் நடத்திய நாடகத்தில் ஒரு சுயமரியாதைத் திருமணத்தில் நான் தலைமையேற்று நடத்தும் நாடகக் காட்சி (கலவரம் நடந்த புதுவை மாநில திராவிடர் கழக மாநாட்டிற்கு முதல் நாள் இரவு) அப்போது நாடகக் கொட்டகையில் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள், நாடகக் கொட்டகையில்  எனது சுயப் பேச்சை ரசித்துப் பாராட்டி தட்டிக் கொடுத்தார்!
பிறகு, நாளும் அவர் உடல்நலம் குன்றி, காசநோய் முற்றிய நிலையில், கணீர், கணீர் என்று சொற்கள் சோர்விலாது, சொரணையூட்டும் வகையில் வந்து விழும் நிலை குறைந்து, ஆற்றிய இறுதி உரை ‘’ஈரோடு ஸ்பெஷல் மாநாடு’’ – அண்ணா தலைமை தாங்கினார். ‘பெட்டிச் சாவி’யைக் கொடுத்த மாநாடு – பல வகையிலும் இயக்க வரலாற்றில் இடம்பெற்ற மாநாடல்லவா அது!

அஞ்சாநெஞ்சன் அழகிரி கலந்துகொண்ட
இறுதி நிகழ்ச்சி!
அதில் தளபதி அழகிரி அவர்கள் ஆற்றிய உரை, கேட்ட அனைவரது கண்களையும் கண்ணீர்க் கடலாக ஆக்கிய உரை!
‘’இங்கு எல்லோரும் எனக்குமுன் பேசியவர்கள் இது இறுதி மாநாடு – சிறையில் இருப்போம் என்று கூறி, வழியனுப்பும் மாநாடாக இதனைச் சித்தரித்துப் பேசினார்கள்.
ஆனால், என்னைப் பொறுத்தவரையில், இது எனக்கு, நான் விடைபெறும் கடைசி இறுதி மாநாடு – உங்களுக்கும், என் தலைவருக்கும் நன்றி சொல்லி, நான் விடைபெற்றுக் கொள்ளவிருக்கும் எனக்கு உரிய கடைசி மாநாடு’’ என்ற சொற்கள் அவரிடமிருந்து கேட்டு, கேவிக் கேவி அழுதத் தோழர்களின் அழுகுரல், வடித்த கண்ணீர் இன்னமும் எனது நினைவைவிட்டு நீங்காமல் இருக்கச் செய்கிறது!
அக்டோபரில் மாநாடு, பிறகு கொடிய நோயினால் படுக்கை – அதன் பிறகு அந்த சண்டமாருதம் தனது சங்கீத முழக்கத்தை நிறுத்திக் கொண்டது; இயற்கையின் கோணல் புத்தியே அது!

இளைஞர்களே, உங்கள் பொறுப்பு!
தன் தலைவனுக்கு இறுதி வணக்கத்தை அந்த கட்டுப்பாட்டின் காவலரான கழக இராணுவத் தளபதி, இடியே தோற்றுப் போகும் வகையில் முழங்கிய குரல் அடங்கியது (மார்ச் 28, 1949).
‘’அந்தக் குரல் சாகாது ஒருபோதும்‘’ என்று உலகிற்குக் காட்டவேண்டியது, இளைஞர்களே, இனி உங்கள் பொறுப்பல்லவா!
அவர் வாழ்ந்து காட்டிய அந்தக் கட்டுப்பாட்டைப் பின்பற்றிட சூளுரை எடுப்போம், எடுப்போம்!
இதுவே அஞ்சாநெஞ்சனின் நினைவைப் போற்றும் மதிப்பும், மரியாதையுமாகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *