கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

ஜனநாயகத்தை மோடி காலில் போட்டு மிதிக்கிறார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சென்னை, மார்ச் 21-
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் 91-வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில்   கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேக் வெட்டினார். அப்போது, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு இயக்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.எஸ்.திரவியம், கலைப்பிரிவு செயலாளர் சூளை ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து, கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:- ராகுல்காந்தி இங்கிலாந்தில் உள்ள கல்லூரிக்கு சென்று ஜனநாயகத்தை பற்றி பேசினார். அங்கு, இந்திய பாராளுமன்றத்தில் நடந்தவை குறித்து பேசினாரே தவிர ஜனநாயகம் தவறு என்று பேசவில்லை. மோடிக்கு எதிராக ஒரு கருத்து சொன்னால் அது இந்தியாவிற்கு எதிராக சொல்லப்பட்ட கருத்து என்று பா.ஜ.க. சொல்கிறது.
ஜனநாயகத்தை மோடி காலில் போட்டு மிதிக்கிறார். ஜனநாயகத்தின் குரல்வளையை பா.ஜ.க நெரிக்கிறது. பாராளுமன்றத்தை முடக்குவதே பா.ஜ.க.தான். பாராளுமன்றத்தில் ஒரு தரப்பை பேசவே விடமாட்டோம் என்பது நியாயமா? எங்களுடைய கோரிக்கை எல்லாம் ஜனநாயகத்தை பற்றி பேச அனுமதி வழங்க வேண்டும் என்பது மட்டுமே.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் வரும் 28-ந்தேதி ஈரோட்டில் இருந்து வைக்கம் நோக்கி நடைபயணம் செல்ல உள்ளோம். தமிழ்நாடு, கேரளா காங்கிரஸ் கட்சிகள் சார்பில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நடைபயண திட்டத்தை ஒருங்கிணைக்க ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் குழு அமைத்துள்ளோம். நடைபயணத்தை நான் தொடக்கி வைக்க உள்ளேன்.
நடைபயணத்தில் பங்கேற்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம். தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. மாணவர்கள் தேர்வு எழுதாமல் இருப்பது நமது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். இந்த விவகாரத்தில், அரசுக்கு மட்டும் இல்லை பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்களும், மாணவர்களுக்கு பள்ளிக்கு மொபைல்போன் கொண்டுவர தடை விதிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை ஒழிக்க முடியவில்லை என்றாலும் கூட அது மாணவர்களின் கைகளில் கிடைக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *