பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 600 காங்கிரஸார் மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், சென்னை காவல் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு பிரதமர் மோடி நேற்று சென்னை வந்த நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புச் சட்டை அணிந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிவல்ல பிரசாத், கே.எஸ்.அழகிரி, செல்வப் பெருந்தகை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹசீனா சையத் தலைமையிலான டீம் சென்னையில் தனியாக போராட்டம் நடத்தியது.மேலும், காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ரஞ்சன் குமாரை பிரதமர் மோடி புறப்படும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் வீட்டுக்காவலில் வைத்திருந்தனர்.ராகுல்காந்தி மீதான நடவடிக்கைகளால் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டிருந்தனர் காங்கிரஸ் கட்சியினர். ஆனால் அது போன்ற நிகழ்வு நடந்துவிடாமல் சென்னை போலீஸார் மிகுந்த கவனமுடன் செயல்பட்டனர்.கோ பேக் மோடி என்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகள் ஏந்தியபடி நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் திரண்டதால் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, உள்ளிட்ட 600 காங்கிரஸ் கட்சியினர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. தங்கபாலுவை தவிர வேறு எந்த முன்னணி காங்கிரஸ் தலைவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எஸ்.அழகிரி உட்பட 600 காங்கிரஸார் மீது வழக்குப்பதிவு.
