குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. சென்னை, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 10 ஆயிரத்து 117 காலி பணியிடங்களில் தட்டச்சர் பிரிவில் மட்டும் 2 ஆயிரத்து 500 காலிப்பணியடங்கள் உள்ளன. இந்த 2500 பணியிடங்களுக்கு 450 பேர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தேர்ச்சி பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிக அளவில் தேர்வாகியுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் தேர்வைகள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்து டிஎன்பிஎஸ்சி கூறும்போது, குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை. ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கான பயிற்சி வழங்குவதில் குறிப்பிட்ட பகுதி என்பது முன்னணியில் இருக்கும். கடந்த காலங்களிலும் தட்டச்சர் பிரிவில் காஞ்சிபுரம் மற்றும் சங்கரன் கோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரே பகுதியில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற காரணத்திற்காக எவ்வித முகாந்தரமும் இல்லாமல் முறைகேடு நடந்ததாக கூறுவது தவறானதாகும். எனவே குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறுவது தவறாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *