தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில்
நடைபெற்ற ஒரு நிகழ்வு குறித்து மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எழுப்பிய
கவன ஈர்ப்புக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்
அளித்த பதில்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம்,
காவேரிப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு குறித்து இங்கே கவன ஈர்ப்பினை
எழுப்பியிருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை, தங்களின் அனுமதியோடு இந்தப்
பேரவைக்கு அளித்திட விரும்புகிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கிருஷ்ணகிரி மாவட்டம்,
காவேரிப்பட்டினம் காவல் நிலைய சரகம், கிட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெகன் (வயது 28)
என்பவர்,
மார்ச் 21 அன்று சுமார் 1.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் கே.ஆர்.பி.
அணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முழுக்கான்கோட்டை கிராமத்தைச்
சேர்ந்த சங்கர் (அ.இ.அ.தி.மு.க பிரமுகர்) உள்ளிட்ட மூவர், ஜெகனை வழிமறித்து
ஆயுதங்களால் தாக்கியதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக, காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு
விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்த விசாரணையில், கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயிலும்
மாணவியான சங்கரின் மகள் சரண்யாவை, டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான ஜெகன்
காதலித்து, பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு அழைத்துச் சென்று, 26-1-
2023 அன்று கோவிலில் வைத்துத் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமுற்ற சங்கர் உள்ளிட்டோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சங்கர் காவல் துறையினரால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2
கொலையில் சம்பத்தப்பட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர், அவதானப்பட்டி
அதிமுக செயலாளர் என்பது காவல் துறையினரால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள்
நடைபெறாதவண்ணம் உரிய நடவடிக்கைகளும், விழிப்புணர்வுப் பணிகளும் காவல்
துறை சார்பில் மாவட்ட நிருவாகத்தின் சார்பிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
சமூக நீதி காக்கும் மண்ணாக விளங்குகின்ற தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள்
நடைபெறாதவண்ணம் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து
மனிதநேய அடிப்படையில், சமூக நல்லிணக்கத்தைப் பேணிக் காத்திட வேண்டுமென
இந்த மாமன்றத்திலுள்ள அனைத்து மாண்புமிகு உறுப்பினர்களையும் வேண்டிக் கேட்டு,
இந்த விளக்கத்தை அளித்து அமைகிறேன்.
——