ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நெருக்கடியான கட்டத்தில் இறங்கி பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட சிஎஸ்கே கேப்டன் தோனி, கடைசி பந்தில் வெற்றியை கோட்டைவிட்டாலும்… ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடிக்க தவறவில்லை. சென்னை அணியின் கேப்டனாக தனது 200வது போட்டியில் விளையாடிய அவர், தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இந்த நிலையில், தோனி முழங்கால் மூட்டு காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி வருவதாக சிஎஸ்கே அணி தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார். இது குறித்து ஃபிளெமிங் கூறுகையில், ‘தோனி முழங்கால் மூட்டு காயத்துக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த காயத்துடன் தான் நடப்பு தொடரில் அவர் விளையாடுகிறார். உடல்தகுதி விஷயத்தில் அவரது அணுகுமுறை தொழில் ரீதியிலானது. அதில் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டார். இந்த சீசனுக்காக அவர் பல மாதங்களாக கடின பயிற்சி மேற்கொண்டார். அந்த காயத்தால் சற்றே சிரமப்பட்டாலும், தோனியின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் எந்த பாதிப்பும் இல்லை” என்றார். ராஜஸ்தான் போட்டியின்போது வேகப் பந்துவீச்சாளர் சிசந்தா மெகாலா (தென் ஆப்ரிக்கா) காயம் அடைந்ததும் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. சென்னை அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் 17ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகிறது.