கவர்னருக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் .

மாநிலத்தின் கண்ணியத்திற்குரிய பொறுப்பில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவர்களிடையே பேசும்போது அந்த கண்ணியம் பற்றிய கவலை சிறிதுமின்றி பேசியுள்ளார். சென்னை, மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாநிலத்தின் கண்ணியத்திற்குரிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களிடையே பேசும்போது அந்த கண்ணியம் பற்றிய கவலை சிறிதுமின்றி பேசியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பலரும் உயிரிழந்த சூழலில், பாதிக்கப்பட்ட மக்கள் பலகாலம் போராடினர்.துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்த பின்னரே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அப்படிப்பட்ட போராட்டம், வெளிநாட்டு நிதியால்தான் கட்டமைக்கப்பட்டது என்று ஆளுநர் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்ட விதியின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநர், எதிர்க்கட்சியினர் போலப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.ஆளுநர் கூறிய தகவல் உண்மையாக இருக்குமானால், மத்திய உள்துறையிடம் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே? அதைவிடுத்து, மாணவர்கள் மத்தியில் பேசுவது, உண்மைக்கு மாறானதும், அவதூறு என்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது.வெளிநாட்டு நிதி தொடர்பாக தான் குறிப்பிட்ட விவரங்களை, தமிழக காவல் துறைக்கோ அல்லது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கோ பகிர்ந்துள்ளாரா என்பதை ஆளுநர் விளக்க வேண்டும். எதிர்காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் அமரப்போகும் மாணவர்கள் மத்தியில் இப்படிப் பேசுவது, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவோர் குறித்த எதிர்மறைப் பிம்பத்தைக் கட்டமைத்துவிடும். உரிமைகளுக்காகப் போராடும் ஜனநாயக அடிப்படையையே இந்தப் பேச்சு குழிதோண்டி புதைத்துவிடும். அரசியல் சாசனப் பொறுப்பில் இருந்துகொண்டு, தனிப்பட்ட முறையில் தனக்குத் தோன்றியதை எல்லாம் பொதுவெளியில் பேசுவதை இனியாவது ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அறவழியில் போராடும் மக்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையிலும், மக்கள் உணர்வுகளை மதிக்காமலும் ஆளுநர் பேசியிருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர் இருப்பது ராஜ்பவன், “ரவி பவன்” அல்ல என்பதை மாண்புமிகு ஆளுநர் நினைவில்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *