கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க, விசாரணை குழுவை நியமிப்பது சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக விளக்கமளிக்க கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹரிபத்மன் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரி கல்லூரி மாணவிகள் ஏழு பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்கள் அடையாளத்தை வெளியிடாமல் இந்த வழக்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ள மாணவிகள், தங்கள் விவரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கல்லூரியில் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர கலாஷேத்ரா அறக்கட்டளை தவறிவிட்டதாகவும், பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை தடுப்புக் கொள்கையை வகுக்கும் சட்டப்பூர்வ கடமையில் இருந்தும் கலாஷேத்ரா தவறி விட்டதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை குற்றச்சாட்டு குறித்து மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், தானாக முன்வந்து விசாரணை நடத்த குழுவை அமைத்தது சட்டவிரோதமானது எனவும், மாணவிகளின் புகார் மீது விசாரணை நடத்த அக்கறை காட்டாதது பாரபட்சமானது எனவும் கூறப்பட்டுள்ளது. புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என கலாஷேத்ராவுக்கு தடை விதிக்கவேண்டும்; பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உள் விசாரணைக் குழுவில், மாணவிகள் மற்றும் பெற்றோரின் பிரதிநிதிகளை சேர்த்து மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.