கம்பம் அருகே குளக்கரையை சேதப்படுத்தி பழமையான மரம் வெட்டிக்கடத்தல்-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை .

கம்பம் அருகே ஊத்துக்காடு இடையன்குளம் கரையை சேதப்படுத்தி, அங்கிருந்த பழமையான மரத்தை வெட்டிக்கடத்திய மர்ம நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பம் அருகேயுள்ள ஊத்துக்காடு பகுதி. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில தென்னை, வாழை, திராட்சை மற்றும் காய்கறி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதி விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக ஊத்துக்காடு கோம்பைச் சாலை பிரிவில் உள்ள இடையன்குளம் உள்ளது.

மழை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இருந்து வரும் காட்டாற்று தண்ணீரும், 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் போது வரும் தண்ணீரும், பல ஏக்கர் பரப்பில் உள்ள இந்த குளத்தில் சேமிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த குளத்தை பாதுகாக்கும் விதமாக குளத்தைச் சுற்றி கரைகள் அமைக்கப்பட்டும், கரைகளில் வேம்பு, புளியமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது குளத்தில் தண்ணீர் இல்லாததால் குளம் வறண்டு கிடக்கிறது.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில மர்ம நபர்கள் இரவு நேரங்களில் இக்குளக்கரையில் உள்ள பழமையான சில மரங்களை வேரோடு வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். அதோடு குளத்தின் கரையும் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் அடுத்து வரும் மழைகாலங்களில் குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழமையான மரத்தை வெட்டிக்கடத்தியதோடு, குளக்கரையையும் சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஊத்துக்காடு பகுதியைச்சேர்ந்த விவசாயி கண்ணன் கூறுகையில், ‘‘தொடர்ந்து ஊத்துக்காடு பகுதியில் பழமையான மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் மரங்களை வெட்டும்போது அதன் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் குழாய்களையும் உடைத்து விடுகின்றனர். இதனால் விவசாயம் பாதிக்கும் நிலைமை ஏற்படுகிறது. மேலும் குளத்தின் கரைகள் முற்றிலுமாக சேதப்படுத்தி உள்ளதால் மழை மற்றும் நீர் வரத்து காலங்களில் வெள்ளம் குளத்திலிருந்து விவசாய நிலங்களுக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதனால், இச்செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *