கடுப்பான கனிமொழி.. அண்ணாமலையை பற்றி கேட்டதுமே..

அண்ணாமலை தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை தக்க வைக்க திமுக மீது குற்றச்சாட்டு வைக்கிறார் என்று மூத்த தலைவரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், முத்துச்சாமி ஆகியோர் ஊழலில் ஈடுபட்டதாக புகார் கூறி இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடப்போவதாக கூறி வந்தார்.அதன்படி, திமுகவினரின் சொத்து பட்டியல் குறித்த விவரங்களை அவர் நேற்றைய தினம் வெளியிட்டார். அதாவது, முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நெருக்கமானவர்கள் என பலரின் சொத்து மதிப்புகள் மொத்தமாக 1.31 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இருப்பதாக அந்த லிஸ்ட்டில் குறிப்பிட்டு இருந்தார்.மேலும், ரபேஃல் வாட்ச் விவகாரம் பேசுபொருளான நிலையில், அதற்கான விளக்கத்தையும் அண்ணாமலை கூறியிருந்தார்.. கோவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து வாட்சை வாங்கியதாகவும் அதற்கான ரசீது இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.. அடுத்தக்கட்ட லிஸ்ட் விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். திமுகவை தவிர, பிற கட்சிகளும் இதில் அடக்கம் என்று கூறியிருப்பதால், அதிமுகவுக்கு மறைமுகமாகவே செக் வைப்பது போல இது தெரிகிறது. அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் அனைவரும் அவர் மீது ஆதாரங்களைக் கேட்டு தமிழகம் முழுவதும் இருக்கும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்போவதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி பதிலடி கொடுத்துள்ளார். இன்னும் 15 நாட்களுக்குள் திமுகவின் சொத்து மதிப்பு பட்டியல் என வெளியிட்ட வீடியோவுக்கு முழு ஆதாரத்தையும் அண்ணாமலை கொடுக்கவில்லை என்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.இதனிடையே, “அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று கனிமொழி எம்பி காட்டமாக கூறியிருக்கிறார். டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பு உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழியிடம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கனிமொழி, “சில பேர் அரசியலில் அவர்களது நிலையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று தவறான விஷயங்களை பேசி வருகின்றனர். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.. இதனிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “திமுக பைல்ஸ்” என்ற பெயரில் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை மட்டுமே வெளியிட்டதாகவும், எந்த ஊழல் பட்டியலையும் வெளியிடவில்லை என்றும் சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *