ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கியது செல்லும் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் தெரிய வந்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வானார் பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வானார். இதையடுத்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். பொதுச்செயலாளர் சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் வழக்குகளை தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு, கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் குரு கிருஷ்ணகுமார் வாதிடும்போது, 2017ல் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்காலம் 2026 டிசம்பர் வரை உள்ளது. பொதுச்செயலாளர் பதவி என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே வகிக்க கூடிய வகையில் விதிகள் உள்ளது. தேர்தல் ஆணையம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளையே அங்கீகரித்துள்ளது. இவர்களுக்கு மட்டுமே கட்சியில் அதிகாரம் உள்ளது. இந்த நிலையில் எந்த தேவையும் இல்லாமல் பொதுசெயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது கட்சி விதிகளுக்கு முரணானது என்றார்.
மனோஜ் பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி, ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்காததால், நேற்றைய தேதி வரை இடைக்கால பொது செயலாளர் என்ற பதவி என்பதே இல்லை. எந்த காரணமும், எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் கட்சியிலிருந்து மனுதாரரை நீக்கியுள்ளனர். ஒற்றை தலைமை வேண்டும் என்று பெரும்பான்மையினர் விரும்பினாலும் அதை ஒருங்கிணைபாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்தே முடிவெடுக்க முடியும் என்றார்.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் நேற்று நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்கினார். அவர் வழங்கிய தீர்ப்பில், ‘ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வதை நீக்கியது, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும். ஆகவே ஓ பன்னீர் செல்வம் தரப்பு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடையில்லை அதே சமயம் ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கிறோம்.. ‘ இவ்வாறு தெரிவித்தார்.