ஒடிசாவில் ஓய்வூதியம் பெற 8 கிலோ மீட்டர் தூரம் வெயிலில் ஊர்ந்து சென்ற மூதாட்டி

ஒடிசாவில் மாதாந்திர ஓய்வூதிய தொகை பெறுவதற்காக சுட்டெரிக்கும் வெயிலில் தள்ளாத வயதில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து சென்ற மூதாட்டி ஒருவர் வங்கி மேலாளரால் ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட சம்பவம் காண்போரை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளது. ஒடிசா மாநிலம் நவரங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாரிங்காவுன் தாலுகாவிற்கு செல்லும் சாலை ஆளையே மூச்சையடைய செய்து கொன்று வீழ்த்திவிடும் அளவிற்கு சுட்டெரிக்கிறது உச்சிவெயில் இந்த மூதாட்டிக்கு வயது 70பதை கடந்துவிட்டது உடலில் பலம் முற்றாக அற்றுப்போய்விட்டது.

ஏற்கனவே வங்கிக்கு செல்லும் போது கீழே விழுந்ததில் ஒரு காலோடு கை விரல்களும் முறிந்துவிட்டன. எப்போதும் ஒத்தாசைக்கு காலொடிந்த நாற்காலி மட்டுமே கையில் இருக்கிறது. ஒரு புறம் பசி மறுபுறம் மொத்த குடும்பத்தையும் பிடித்திருக்கின்ற பசி காலணிகள் இல்லாததால் மூதாட்டியின் கால்களை தார்சாலையின் சூடு பதம் பார்க்கிறது. தனக்கு கிடைக்க பெற வேண்டிய மாதாந்திர ஓய்வூதிய தொகைக்காக சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை நோக்கி ஊர்ந்து செல்கிறார் சூர்யா அரிஜம் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அவலை மூதாட்டி, உயிரை தத்தம் வைத்து வங்கியை அடைந்த மூதாட்டிக்கு வங்கி மேலாளர் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

மூதாட்டியின் கைவிரல்கள் உடைந்து விட்டதால் பணம் எடுக்கமுடியாது என்ற பதிலை கேட்டு மூதாட்டி மட்டுமல்ல அவரது பரிதாப நிலையை பார்த்து அழைத்து வந்த தனியார் செய்தி நிறுவனத்தை சேர்ந்தவரும் பிற வாடிக்கையாளர்களும் அதிர்ந்தே போய்விட்டார்கள். நீண்ட வேண்டுகோளுக்கு பிறகு அவரது ரூ.3,000 கொடுத்து அனுப்பினார் வங்கி மேலாளர் அணில்குமார் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வாத பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மேலாளரை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கையாகும். இந்த மூதாட்டியை படம் பிடித்தவர் அவரை இப்படியே நடக்கவைத்து அழைத்து சென்றாரா என்ற கேள்வியையும் பலர் எழுப்பியுள்ளனர். தங்கள் பாட்டி தங்களது மகளை பார்க்க செல்வதாக கூறிவிட்டு தான் சென்றார் என்கிறார்கள் அக்கறை அற்ற அவரது குடும்பத்தினர். எது எப்படி இருந்தாலும் இதுபோன்ற ஆதரவற்ற முதியோர்களை காக்க அந்தந்த அரசுகள் மட்டும் அல்ல நலமாக இருப்பவர்களும் முன்வர வேண்டும் என்பதே பலரது கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *