ஊட்டி 200 விழாவினை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் 1824ம் ஆண்டு அப்போது கோவை கலெக்டராக இருந்த ஜான் சலீவன் அவர்களால் நீலகிரி மாவட்டம் கண்டறியப்பட்டு வெளி உலகிற்கு பிரபலப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வினை கொண்டாடும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் இம்மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இவ்விழா இம்முறை கோடை விழாவுடன் சேர்த்து நடத்திட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது இதன் ஒரு பகுதியாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மரபு வழி நடைபயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஊட்டி நகரில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களை காண சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
மேலும், புகைப்பட கண்காட்சி மற்றும் போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஊட்டி 200ஐ கொண்டாடும் வகையில் சாலையோரங்களில் வண்ண வண்ண ஓவியங்கள் வரையும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நகரில் முக்கிய சாலைகள் மற்றும் ஊட்டியின் நுழைவு வாயில் பகுதிகளில் உள்ள சாலையோர தடுப்பு சுவர்களில் ஓவியங்கள் வரையப்படடுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் இயற்கை அழகு, வன விலங்குகள் ஆகியவைகள் இடம் பெறும் வகையில் இந்த வண்ண ஓவியங்கள் வரையும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஊட்டி – மைசூர் சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள சாலையோரங்களில் உள்ள தடுப்பு சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த சுவர்களில் புலி, சிறுத்தை, காட்டு மாடு, மான், மயில் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் படங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை கவர்ந்து வருகிறது. பலரும் இந்த ஓவியங்களின் அருகே நின்று புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர்.