உரிமை கோரும் கமல்ஹாசன்!

சென்னை: இந்தியாவிலேயே இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி நாங்கதான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் உரிமை கோரியிருக்கிறார்.தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்; இந்த தொகை வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.பட்ஜெட் உரையில், சரிநிகர் சமமாக உயர்த்த திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது திராவிட மாடல் அரசு.கல்வியில், நிருவாகத்தில், அதிகாரம் மிக்க பொறுப்புகளில், பொருளாதாரத்தில், சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் போதெல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம்.சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம் என்ற இலக்கின்படி செயல்பட்டு வருபவர்கள் மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவீர்கள்.மக்களை தேடி மருத்துவம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்றவை தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை. இத்தகைய புதுமையான திட்டங்களை செயல்படுத்தியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்.வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில்,திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் – பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில்7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறியிருந்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சில விமர்சனங்களையும் முன்வைத்துளஇது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி @maiamofficial. புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் அவர்களைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *