ஈஸ்டர் வாழ்த்து வைகோ தெரிவித்துள்ளார்.

மனித குலத்தின் மனக்காயங்களுக்கு மருந்திடுவதோடு, அழுத்தும் துன்ப இருளில் இருந்து விடுவித்து நம்பிக்கை ஒளி ஏற்றும் உன்னதத் திருநாள்தான், உலகெங்கும் கிறித்தவ மக்கள் போற்றிக் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நாளாகும்.

அன்பையும் கருணையையும், தீங்கு புரிந்தோருக்கும் நன்மை செய்யும் மனிதநேயத்தையும் போதித்த இயேசு கிறிஸ்து நிந்தைக்கு ஆளாகி, பிலாத்து சபையில் வேதபாரகர்களின் தூண்டுதலால் ஏற்பட்ட நிர்பந்தத்தால் தண்டனைக்கு உள்ளாகி, சிலுவையைச் சுமந்தார், சித்ரவதைக்கு ஆளானார்.

கொல்கதா எனும் கபால ஸ்தலத்தில் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். சிரசிலும், கைகளிலும், கால்களிலும் ஆணிகள் அறையப்பட்டன. தாங்கள் செய்வது அறியாமல் செய்யும் இவர்களை பிதாவே மன்னியும்! என்று கூறியவாறு உயிர் நீத்தார்.

மூன்றாம் நாள் இயேசுநாதர் உயிர்த்து எழுந்த ஞாயிற்றுக்கிழமை புனித ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. காலம் காலமாக தமிழகம் சமய நல்லிணக்கத்தைப் போற்றி வருகிறது. ஆனால் சகிப்புத்தன்மைக்கும், சமய ஒற்றுமைக்கும், மதச்சார்பற்ற கொள்கைக்கும் அறைகூவலும் அச்சுறுத்தலும் தலைதூக்கி வரும் இன்றைய காலகட்டத்தில் இயேசுநாதரின் அமுத மொழிகளை நினைவில் கொண்டு மனிதநேயத்தையும், சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க ஈஸ்டர் பண்டிகை நாளன்று உறுதி ஏற்போம்!

தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *