இலவச பயணத்தை காரணம் காட்டி பெண்கள், மாணவிகளை அரசு பஸ்சில் ஏற்ற மறுக்கும் டிரைவர்கள்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இலவச பயணத்தை காரணம் காட்டி பெண்கள், மாணவிகளை அரசு பஸ்சில் ஏற்ற மறுக்கும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் தினமும் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் உட்பட அனைத்து தரப்பு பெண்களும் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால் மாமல்லபுரத்தில் இலவச பயணத்தை காரணம் காட்டி பெண்களையும், மாணவிகளையும் பஸ்சில் ஏற்றாமல் அரசு பஸ் டிரைவர்கள் புறக்கணித்து வருகின்றனர். மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்வதால் இங்குள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க ஆண்களைவிட பெண்களே அதிகளவில் வருகின்றனர். மேலும் மாமல்லபுரத்தில் இருந்து 30 கிமீ சுற்றளவில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் மாமல்லபுரம் வந்து, இங்கிருந்து பஸ் பிடித்து சென்னையில் பல்வேறு இடங்களில் கம்பெனிகளுக்கு தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களாக உள்ளதால் அரசு பஸ்களை பயன்படுத்தவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். ஆனால் இலவச பஸ் பாஸ் மூலமாக பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகளையும், வேலைக்கு செல்லும் பெண்களையும் பஸ்களில் ஏற்ற அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மறுக்கின்றனர்.

இலவச பயணம் என்கிற ஒரே காரணத்தை காட்டி மாமல்லபுரத்தில் திருக்கழுக்குன்றம் சாலை, பூஞ்சேரி, அம்பாள் நகர், பெருமாளேரி வடகடும்பாடி, காரணை, நல்லான்பிள்ளைபெற்றாள், நந்திமா நகர், குழிப்பாந்தண்டலம் மற்றும் எச்சூர் ஆகிய பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி சென்று பஸ்களை நிறுத்துவது, பெண் பயணிகள் ஏறும்போதே பஸ்சை இயக்குவது, இறங்கவேண்டிய பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் அடுத்த நிறுத்தத்தில் நிறுத்துவது, டிக்கெட் கொடுக்கும்போது ஒரு சில கண்டக்டர்கள் கோபமாகவும், அநாகரீகமாகவும் ஒருமையிலும் பேசுவது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை வேலைக்கு செல்லும் பெண்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளும் சந்தித்து வருகின்றனர். எனவே, போக்குவரத்துத்துறை உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பெண்கள் மற்றும் மாணவிகளை ஏற்ற மறுக்கும் அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பெண் ஒருவர் கூறுகையில், ”நான் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். காலை பஸ் ஏறுவதற்காக பூஞ்சேரி கூட்ரோடு நிறுத்தத்திற்கு வந்தால் பெண்கள் அதிகமாக நிற்பதை பார்க்கும் ஒரு சில அரசு பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தாமல் சென்றுவிடுகின்றனர். அந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்களை இறக்கிவிட வேண்டும் என்றால் சிறிது தூரம் தள்ளி நிறுத்துகின்றனர். ஓடிசென்று பஸ்சில் ஏறமுயலும்போது அவசர அவசரமாக ஓட்டி செல்கின்றனர். இலவச பயணம் மூலம் நன்மதிப்பை தமிழக அரசு பெற்றுள்ள நிலையில் இதுபோன்ற டிரைவர், கண்டக்டர்களால் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தலையிட்டு அரசின் உத்தரவை மீறும் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *