இயற்கை முறையில் திப்பிலி சாகுபடி

கொடைக்கானல் கீழ்மலையில் சாதிக்கும் விவசாயி !

வாசனைப் பயிர்களில் மிகவும் ஓர் அற்புதப் பயிராக திப்பிலி இருக்கிறது. இதனை தாவரவியல் ‘பைபர்லாங்கம்’ என்கிறது. மிளகு குடும்பத்தைச் சேர்ந்த இதன் பழுக்காத முதிர்ந்த சரமே உபயோகப்படுகிறது. திப்பிலி சரத்தில் பைபரின் 4 முதல் 5 சதவீதம் மற்றும் பைப்லேட்டின் என்ற வேதிப்பொருளும் இருக்கிறது. இது போக வேரில் பைப்பர்லாங்கு மினின் 0.25 சதவீதம் வரை இருக்கிறது. படரும் வாசனைப் பயிராக மட்டுமல்லாது, இந்த திப்பிலி சிறந்த சித்த மருத்துவப் பொருளாகவும் விளங்குகிறது. மருத்துவத்தில் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா, இருமல் சம்பந்தமான நோய்கள், காய்ச்சல் சிறுநீரகக் கோளாறுகள், மஞ்சள் காமாலை என பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாகவும் விளங்குகிறது. மிதவெப்ப மண்டலப் பயிரான இது, 100 முதல் 1000 மீட்டர் உயரமுள்ள பகுதிகளிலும் கூட அருமையாக விளைகிறது. இதன் வளர்ச்சிக்கு குறைந்த சூரிய ஒளியே போதுமானதாகும். 20 முதல் 25 சதவீதம் நிழல் கண்டிப்பாக தேவை இருக்கிறது.

கொடைக்கானல் கீழ்மலை பள்ளத்தாக்கு கால்வாயில் பாண்டீஸ்வரன் திப்பிலி விவசாயம் செய்து வருகிறார். எம்எஸ்சி தாவரவியல் முடித்திருக்கும் இவர் உள்ளிட்ட சிலரே இவ்வகை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயி பாண்டீஸ்வரனிடம் பேசினோம்…‘‘இதனை பயிரிட முதலில் நிலத்தை நன்றாக இரண்டு அல்லது மூன்று முறை உழுதோ அல்லது கிளறி விட்டோ தயார் செய்ய வேண்டும். 3 க்கு 25 மீட்டர் அளவில் உயர பாத்திகள் தயாரித்து அதில் 30 முதல் 45 செ.மீ உயரம், ஆழம், நீளமுள்ள குழிகளை 60 க்கு 60 செ.மீ இடைவெளியில் எடுத்து குழியை நன்கு ஆறவிட்டு அதில் மக்கிய தொழு எரு இட்டு, நன்கு வேர்விட்ட வேர் குச்சிகளை நடவு செய்யவும். வயலில் நீர் தேங்காதவாறு வாய்க்கால்கள் அமைத்து நீர்ப்பாய்ச்சி, திப்பிலியின் வளர்ச்சிக்கு மக்கிய தொழு உரம் ஹெக்டேருக்கு 20 டன் வரை வயலின் மேல்புறம் சமமாக இட்டு மண்ணை மூட வேண்டும். வாரம் ஒருமுறை நீர்பாய்ச்சினால் போதுமானது.நட்ட முதல் வருடத்தில் களைகள் அதிகமாக காணப்படும். அதனை நீக்கி வயலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கோடைகாலங்களில் திப்பிலி வயலில் காய்ந்த இலைகள் சருகுகளை பயன்படுத்தி வயல் மேற்புறம் மூடி மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டும். கோடைகாலங்களில் தொடர்ந்து நீர் பாய்ச்சும்போது மகசூல் அதிகமாக பெற முடியும். செடியின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக காய்ந்த குச்சிகளையும், மூங்கில்களையும் பயன்படுத்தலாம்’’ என்றார்.தொடர்ந்து பேசிய அவர், ‘‘ கோடைகாலங்களில் மாவுப் பூச்சியின் பாதிப்பு அதிகமாக காணப்படும். இவை வேர்களை தாக்கி சாறுகளை உறிஞ்சும். இதனை கட்டுப்படுத்த இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம். மழைக்காலத்தில் அழுகல் நோய் ஏற்படும். இலைப் புள்ளி நோயும் காணப்படும்.

இதனை கட்டுப்படுத்த போர்டோ கலவை ஒரு சதவீதம் மருந்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம். நடவு நட்ட நான்கு மாதம் கழித்து திப்பிலி சரம் வளர்ச்சியடைந்து கரும்பச்சை நிறத்தை அடையும்பொழுது அறுவடை செய்ய வேண்டும். இல்லையெனில், அதனுடைய வாசனைக் குணம் மாறிவிடும்’’ என்றார்.கேரளாவில் வருடத்திற்கு நான்கு முறை திப்பிலி அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்த திப்பிலியை சூரிய ஒளியில் உலர வைத்து எடுத்து வைக்கின்றனர். நான்கு முதல் ஐந்து நாட்களில் நன்கு உலர்ந்து விடுகிறது. பிறகு ஈரப்பதம் இல்லாத இடத்தில் சேமித்து வைக்கின்றனர். சாதாரணமாக அறுவடை செய்த பச்சை திப்பிலியில் இருந்து உலர்ந்த திப்பிலி 10க்கு 1.5 பங்கு கிடைக்கும் நட்ட முதல் வருடத்தில் உலர்ந்த திப்பிலி ஹெக்டேருக்கு 400 கிலோ கிடைக்கிறது. அதன் பின் மூன்றாவது ஆண்டில் ஒரு ஹெக்டேரில் 1000கிலோ அறுவடை செய்கின்றனர். மூன்று முதல் நான்கு வருடம் கழித்து கொடியின் வளர்ச்சி மற்றும் அதன் காய்க்கும் தன்மை குறையும். அப்போது அந்த திப்பிலி செடியை நீக்கிவிட்டு புதிய செடியை நடவு செய்கின்றனர்.விவசாயி பாண்டீஸ்வரன் கூறும்போது, ‘‘திப்பிலியை சூபாபுல், தென்னந் தோப்புகள், காப்பித் தோட்டங்களில் உள்ள உயரமான மரங்களிடையே ஊடுபயிராகவும் நடவு செய்து அதிக லாபம் பெறலாம்’’ என்றார்.

தண்ணீர் தேங்கினால் அழுகிவிடும்!

செடிக்குச் செடி மற்றும் வரிசைக்கு வரிசை ஐந்து அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஒரு அடி நீள, அகலம் மற்றும் முக்கால் அடி ஆழமுள்ள குழி எடுக்க வேண்டும். அதில், இரண்டு கையளவு நிலத்தின் மேல் மண்ணைப் போட்டு, 500 கிராம் வீதம் தொழுவுரத்தைப் போட்டு, நடவு செய்ய வேண்டும் (ஏக்கருக்கு 600 விதைக் குச்சிகள் தேவைப்படும்). நடவு செய்தவுடன் குழியில் நேரடியாக தண்ணீர் பாய்ச்சாமல், ஒரு வாரம் வரை தினமும் தெளித்து விடவேண்டும். பிறகு, 3 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். திப்பிலிக்கு எப்போதுமே ஈரப்பதம் இருக்கவேண்டும். அதேசமயத்தில் அளவுக்கு அதிகமாகவும் தண்ணீர் தேங்கக்கூடாது. தேங்கினால், வேர் அழுகி விடும்.

தொழுவுரமே போதும்!

திப்பிலியை நடவு செய்த 15-ம் நாள், ஒவ்வொரு செடிக்கும் ஒரு கிலோ தொழுவுரம் போடவேண்டும். இதேபோல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொழுவுரத்தை மட்டும் போட்டாலே போதும். இதை பூச்சி, நோய்கள் தாக்குவது இல்லை. இதன் வாசனை, தோட்டம் முழுவதும் வீசுவதால், தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டு, வாழையை வாட்டும் கூன் வண்டு ஆகியவற்றின் தாக்குதலும் குறைகிறது. களைகளும் அதிகம் முளைப்பதில்லை. அத்தோடு, திப்பிலியின் காய்ந்த இலைகள் நிலத்துக்கு உரமாகவும் ஆகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *