இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஈத் பெருநாள் வாழ்த்து செய்தி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் ஈத் பெருநாள் வாழ்த்து செய்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ரமளான் மாதம் முழுவதிலும் நோன்பிருந்து, அதன் இறுதியில் அனுசரிக்கும் விழாதான் ரம்ஜான் நோன்பு பெருநாள்.
நோன்பு மாதம் முழுவதிலும், திருக்குர் ஆனை ஓதியும் படித்தும் சிந்தித்தும் வரும் காலமாகக் கழிந்திருக்கிறது. தினந்தோறும், ஏழை எளியவர்களுக்குத் தன்னால் ஆன உதவி, உபகாரம் செய்வதை நோன்பாளி தொடர்ந்து வந்திருக்கிறார்கள். ஆண்டு வருமானத்தில், தன்னிடம் உள்ள மற்றவற்றில் இரண்டரை சதவீதம் ஏழை வரியாகப் பகிர்ந்தளிப்பது கடமையாக இருந்திருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பண்டிகை தினத்தன்று கூட்டுத் தொழுகைக்குச் செல்லும் முன்னர் வசதி வாய்ப்புள்ள ஒவ்வொரு நோன்பாளியும் ஒரு ஏழை எளியவரின் அன்றைய உணவுக்கு வழி செய்திட வேண்டும் என்றும் விதி வகுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான் நோன்பு பெருநாள், ‘ஈத்துவக்கும் இன்பத் திருநாள் ‘ என்று போற்றப்படுகிறது.
“” ஏழைகள் சோகத்தின் அளாவினைக் காண, ஏகவன் தந்தான் ரமளான் மாதம் “” எனக் கவிஞர் ஒருவர் பாடியிருக்கிறார். மானிடர் மத்தியில் இல்லாதவர் பெருகுவதற்கு காரணம், நோன்பு தோற்பவர் சிலராக இருப்பதுதான் என்பதை வள்ளுவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
“” இலர், பலர் ஆகிய காரணம், நோற்பார் சிலர், பலர் நோலா தவர்””
மனித நேயத்தை வளர்க்கும் நோன்பை நோற்றவர்கள், மனித மாண்பை வளர்ப்பவர்கள் ஆவார்கள்.
மானிடம் முழுவதிலும் நட்பும், நல்லுறவும், நேயமும், நல்லெண்ணமும் பல்கிப் பெருகிட வாழ்த்துவோம். ஈத் முபராக் ! இவ்வாறு ஈத் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.