இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லையாம் ராஜ்நாத் சிங் தகவல்

அருணாசல பிரதேச எல்லையில் நடைபெற்ற இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதிக்கு அருகேயுள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், கடந்த 9-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்று உள்ளனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் சீன வீரர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீன வீரர்கள் எல்லைக்கு அருகே சட்டவிரோதமாக வேலி அமைக்க முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நீடித்த இந்த மோதலில் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் இருதரப்பு வீரர்களும் அப்பகுதியிலிருந்து விலகி தங்கள் பகுதிக்கு திரும்பிவிட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் வெடித்தது. அதுதொடர்பாக, இன்றைய அலுவல்களை உடனடியாக ஒத்திவைத்துவிட்டு எல்லைப் பிரச்னை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், அவைகளில் விவாதம் நடத்த வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் அவையில் கோஷம் எழுப்பினர். இதனால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் பகல் 12 மணிக்கு அவைகள் கூடியவுடன், மக்களவையிலும், தொடர்ந்து மாநிலங்களவையிலும் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், “டிசம்பர் 9ஆம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. இதை துணுச்சலுடன் எதிர்கொண்ட இந்திய ராணுவம் அத்துமீறலை தடுத்து நிறுத்தியது. அப்போது, இந்திய – சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலால் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில், நமது வீரர்கள் யாரும் உயிரிழக்கவோ, பலத்த காயமடையவோ இல்லை. இந்திய ராணுவம் மிகுந்த வீரத்துடன் சீன ராணுவ வீரர்களை தடுத்தது. இந்தியர்கள் காயமடைந்தபோதும், சீன வீரர்களை அவர்களது முகாமுக்கு திருப்பியனுப்பி பதிலடி தந்தனர்

இந்திய ராணுவ கமெண்டர்கள் சரியான நேரத்தில் இந்த பிரச்னையில் தலையிட்டதால், உடனடியாக சீன ராணுவ வீரர்கள் அவர்களின் பகுதிகளுக்கு பின் வாங்கினர். இதன்பிறகு டிசம்பர் 11ஆம் தேதி இரு நாட்டு கமெண்டர்களும் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தியாவின் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என்றும் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக தெரிவித்தவர், இந்த பிரச்னையில், எல்லையில் அமைதி காக்கப்படும் என்று சீன தரப்பும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ராஜ்நாத் சிங்கின் அறிக்கை மீது விவாதம் நடத்துவதற்கு அவைத் தலைவர் அனுமதி அளிக்காததால், மக்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.