ஆஸ்கார் விருது பெற்ற “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப் படத்தின்
இயக்குநர் செல்வி. கார்த்திகி கொன்சால்வ்ஸ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்
தொகைக்கான காசோலை – தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்
இன்று (21.3.2023) தலைமைச் செயலகத்தில், ஆஸ்கார் விருது பெற்று உலக
அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்த “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்”
ஆவணப் படத்தின் இயக்குநர் செல்வி. கார்த்திகி கொன்சால்வ்ஸ் அவர்களை
ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்
தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கி, சால்வை
அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார். அப்போது, இயக்குநர்
செல்வி. கார்த்திகி கொன்சால்வ்ஸ் அவர்கள் தான் பெற்ற ஆஸ்கார் விருதினை
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
முதுமலை யானைகள் முகாமில் எடுக்கப்பட்ட ஆவணப் படமான
"தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப் படத்திற்கான குறும்படப் பிரிவில்
ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. இக்குறும்படத்தை செல்வி. கார்த்திகி
கொன்சால்வ்ஸ் அவர்கள் இயக்கியுள்ளார். தமிழ்நாடு வனத்துறையின்
பராமரிப்பாளர்களால் இளம் யானைக் குட்டிகள் வளர்க்கப்படும் முறையை
இந்தப் படம் விவரிக்கிறது.
தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள
தெப்பக்காடு யானைகள் முகாமில் பணியாற்றி வரும் திரு. பொம்மன் மற்றும்
திருமதி பெல்லி ஆகிய யானை பராமரிப்பாளர்களால் ஆறு மாத வயதில்
முகாமிற்கு கொண்டு வரப்பட்ட “ரகு” யானைக் குட்டியை மேற்படி
பராமரிப்பாளர்கள் எவ்வாறு கவனத்துடன் பராமரித்தார்கள் என்பதை
ஆவணப்படம் காட்டுகிறது. இப்படம் அதே முகாமில் காப்பாளர்களால்
வளர்க்கப்பட்ட மற்றொரு யானைக் குட்டியான “அம்மு” பராமரிக்கப்பட்ட
கதையையும் விவரிக்கிறது.
இந்த ஆவணப்படம் சினிமா துறையில் மிக உயரிய விருதான “ஆஸ்கார்”
விருதை வென்றுள்ளதுடன் தமிழ்நாட்டிற்கு பெருமையையும் சேர்த்துள்ளது.
இந்த ஆவணப்படம் மூலம், யானைகளை பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு
வனத்துறையின் பணி உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
இதை அங்கீகரிக்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள், தமிழ்நாடு அரசின் வனத்துறைக்கு பெருமை ஏற்படுத்தியதற்காக,
ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்”
படத்தினை உருவாக்கிய செல்வி.கார்த்திகி கொன்சால்வ்ஸ் அவர்களுக்கு
பாராட்டுச் சான்றிதழும், ரூ.1 கோடிக்கான காசோலையும் வழங்கினார்.
முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.03.2023
அன்று ஆதரவற்ற யானைக் குட்டி “ரகு”வின் பராமரிப்பாளர்களான
திரு.பொம்மன் மற்றும் திருமதி பெல்லி ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்
காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும், மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, முதுமலை புலிகள்
காப்பகத்தின் தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் ஆனைமலை புலிகள்
காப்பகத்தின் கோழிகம்முத்தி யானைகள் முகாமில் பணிபுரியும் 91 யானைப்
பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு மானியமாக முதலமைச்சரின் பொது நிவாரண
நிதியிலிருந்து தலா 1 லட்சம் ரூபாய் வீதம் நல்கை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர்
மரு.மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முனைவர். வெ. இறையன்பு,
இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல்
தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., முதன்மை தலைமை
வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் திரு. ஸ்ரீனிவாஸ்
ஆர். ரெட்டி, இ.வ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
••••••••••••••