டெல்லி: சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கெடு விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கெடு விதித்து கடந்த 10ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டை போல பாஜக ஆளாத மாநிலங்கள் அனைத்திலும் தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். மு.க.ஸ்டாலின் கடிதத்திற்கு பதில் அளித்து கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை போன்று டெல்லி சட்டப்பேரவையில் நிறைவேற்ற உள்ளதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டிப்பதாகவும் கெஜ்ரிவால் கூறினார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். வரும் 17ம் தேதி டெல்லி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.