ஆளுநரின் அடாவடி நடவடிக்கைகளைக் கண்டித்து மக்கள் திரளுவதுதான் ஒரே வழி!கி.வீரமணி  விடுத்துள்ள அறிக்கை

ஒவ்வொரு நாளும் சர்ச்சைக்குள்ளாகும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசின் பொறுமையை, பெருந்தன்மையை பலவீனமாகக் கருதி பல்லாங்குழி ஆடுகிறார்! ஆளுநரின் அடாவடி நடவடிக்கைகளைக் கண்டித்து மக்கள் திரளுவதுதான் ஒரே வழி என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற மேனாள் அய்.பி.எஸ். அதிகாரி, வந்த நாள் முதல் இன்றுவரை மாநில அரசின் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் எதிர்நிலையை எடுப்பதோடு, முழு ஒத்துழையாமையை திட்டமிட்டே நடத்தி வருவது கண்கூடு.

சட்டமன்றத்திலிருந்தே வெளிநடப்புச் செய்த விசித்திர ஆளுநர்!

தமிழ்நாட்டு சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாதபடி, சட்டப்பேரவையில் உரையாற்றுகையில், அரசமைப்புச் சட்ட வரைமுறைகள், மரபுகள் – எல்லாவற்றையும் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு, சட்டமன்றத் திலிருந்தே வெளிநடப்புச் செய்த விசித்திர வித்தகர் இந்த ஆளுநர்!

ஆளுநர் மாளிகைக்கும், அவரது செலவினங் களுக்கும் தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்ட தொகை யைப் பன்மடங்கு கூடுதலாகப் பெறவும், அதை வெவ் வேறு செலவினங்களுக்குத் திருப்பிவிட்டு, நிதியமைச் சரின் கேள்விக்கு ஆளாக்கப்பட்டுள்ளவரும் இந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே!

உச்சநீதிமன்றத்தால் குட்டுப்பட்ட ஆளுநர்!

ஆயுள் கைதி பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் தேவையில்லாமல் – அரசமைப்புச்சட்ட வரைவைமீறி, தானடித்த மூப்பாகவே நடந்துகொண்டதுபற்றி உச்சநீதி மன்றத்தால் குட்டுப்பட்டதும், அதன்பிறகு மற்றொரு முறையிலும் அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைப்பற்றி இவர் கவலைப்படாது நடந்துகொண்டபோதும், ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படி நடவடிக்கை வேண் டியவரே என்று உச்சநீதிமன்றம் சுட்டி, தட்டிக் கேட்டதும் இவரது ஆளுமைபற்றியே!

தமிழ்நாடு அரசின் கொள்கை, திட்டங்களுக்கு எதிராகவே 

நடந்து கொள்கிறார்!

நாளும் ‘சர்ச்சை நாயகனாகவே’  நடந்து, ஊடக வெளிச்சத்தில் நின்று ஒரு போட்டி அரசினை நடத்தும் இவர், அடிக்கடி ராஜ்பவனத்தில் கூட்டங்கள் கூட்டி, தமிழ்நாடு அரசின் கொள்கை, திட்டங்களுக்கு எதிராகவே நடந்து, தமிழ்நாடு அரசு, வாக்களித்தத் தமிழ்நாட்டு வாக்காளர்களின் பொறுமையை எல்லை யற்று சோதித்து, சில ஆதாரமற்ற ‘அஸ்திரங்களை’ ஏவிவிட்டு, தனக்குத்தானே மகிழ்ந்து கொள்வதோடு, ராஜ்பவனத்தை ஒரு போட்டி அரசியல் கூடமாக்கிக் கொண்டு தன் போக்கில் நடத்துவதில் தனி ஆர்வம் காட்டுகிறார்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் வழங்காமல், வேண்டுமென்றே கிடப்பில் போட்டு கிண்ணாரம் கொட்டுகிறார்!

ஆளுநரின் நடவடிக்கைகள் 

நாளும் கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றது!

அரசமைப்புச் சட்டத்தின் விதிகளுக்குப் புறம்பாகவே அமைந்து வருகின்ற இவரது நடவடிக்கைகள் – மக்கள் தலைவர்களால் நாளும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது! பல ஊடகங்களும் சுட்டிக்காட்டியுள்ளன!

தமிழ்நாடு அரசின் பொறுமையை, பெருந்தன்மையை பலவீனமாகக் கருதி அரசியல் ‘பல்லாங்குழி’ ஆட்டம் ஆடுகிறார்!

இவரது பல பேச்சுகள் அறியாமையின் அப்பட்ட மாகவோ அல்லது ஆணவத்தின் உச்சசமாகவோதான் தென்படுகின்றன.

அண்மையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப் பதுபற்றி அரசமைப்புச் சட்டப் பிரிவுகள்பற்றிய அவரது விளக்கம் கேட்டு, எப்படிச் சிரிப்பது என்றே எவருக்கும் தெரியவில்லை.

இந்த அரசமைப்புச் சட்டத்தின் கூறு 200 இன்படி ஒரு விநோத அறியாமை பொங்கிடும் அபத்தமான விளக்கத்தைச் சொல்ல, தனது ‘‘ஆழ்ந்த அரசமைப்புச் சட்ட அறிவை”(?) அகிலத்திற்கும் அம்பலப்படுத்தி யுள்ளார்!

அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 இன்படி,

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதக்கள்பற்றி மசோதாக்களுக்கு ஒப்புதல்(Assent to Bills) என்ற துணைத் தலைப்பில் உள்ளதற்கு – ஆளுநர்,

ஆளுநரின் முரண்பட்ட நடத்தைக்கு 

ஓர் உதாரணம்!

1. ஒப்புதல் அளிக்கலாம் அல்லது

2. ஒப்புதலை நிறுத்தி வைக்கலாம்  அல்லது

3. குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கலாம்

4. சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பலாம் (விளக்கம் கேட்கும் வகையில்)

‘Withhold’  என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய அர்த்தத்தை தமிழ் அகராதியில் உள்ளதை ஆளுநர் ரவிக்கு நாம் சுட்டிக்காட்டி, அவர் பிழையை அவர் திருத்திக் கொள்ளவேண்டும் என்பதைச் சுட்டுகிறோம்.

‘Withhold’ ‘  ‘நிறுத்தி வைத்தல்’ என்பதே பொருள்.

இவரது அகராதியில் ‘Withhold’   என்றால், ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்து விட்டது என்பது பொருளாம். இவரது முரண்பட்ட நடத்தைக்கு ஓர் உதாரணம் இது!

மேலும், ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா முதலில் அவசரச் சட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, பிறகு அது நிரந்தரச் சட்டமாக்குவதற்குரிய மசோதாவும் நிறைவேற்றப்பட்டது – அரசமைப்புச் சட்டப்படி சரியான நடவடிக்கை.

அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் – 

மசோதா நிறுத்தி வைப்பு!

அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ரவி, அதன் சட்ட வடிவத்திற்கு – மசோதாவிற்கு மட்டும் ஒப்புதல் தராமல் பல மாதங்கள் நிறுத்தி வைப்பது எவ்வகையில்?

சட்ட விளக்கம் கேட்கிறார்; சட்ட அமைச்சர் திரு.ரகுபதி நேரில் சென்று விளக்கம் அளித்த பிறகு, அதைத் திருப்பி அனுப்புகிறார்; மாநில அரசுக்கு அரசமைப்புச் சட்டப்படி அதிகாரம்  Legislative Competence  இல்லை என்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் 34 ஆவது விஷயமாக இடம் பெற்றதுதான் ‘Betting & Gambling’ சூதாட்டம்பற்றிய அதிகாரம்.

இதை முன்பே நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கும் இதே பதிலைத்தான் அவர் அளித்தார்!

இதெல்லாம் ஆளுநர் அறியமாட்டாது தேவை யில்லாமல் புது வியாக்கியானம் படைப்பதா? ‘‘மசோதாக் களை நிறுத்தி வைத்தால், அதை நிராகரித்தது என்றே பொருள்” என்று கூறி, தனது அரசமைப்புச் சட்ட அறியாமையை வெளிச்சம் போட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது அல்லவா!

கொச்சைப்படுத்திப் பேசி கண்டனத்திற்குள்ளானார்

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் தகவல் தொடர் பாளர்போல் (Spokesperson)   உச்ச, உயர்நீதிமன்றங்கள் நிலைப்பாட்டிற்கு விரோதமாக நடந்து,  அதனைத் தட்டிக் கேட்டுப் போராடியவர்களை கொச்சைப்படுத்திப் பேசி கண்டனத்திற்குள்ளானார்.

தமிழ்நாடு அரசின் (அ.தி.மு.க. அரசு) கொள்கை முடிவு என்று நீதிமன்றங்களே ஏற்ற நிலையில், இவரது அதிகப் பிரசங்கித்தனம் அநியாயம் அல்லவா?

ஆளுநரின் அடாவடித்தனத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது முதலமைச்சரின் அறிக்கை!

தமிழ்நாட்டுத் தலைவர்கள் விரைவில் ஆளுநருக்கு எதிராக – இந்தத் தொடர் தொல்லை நிலைப்பாட்டிற்கு எதிரான ஓர் அறவழிப் போராட்டம்பற்றி யோசித்து முடிவெடுக்கவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. நமது முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கையில், ‘‘ஆளுநர் சர்வாதிகாரியாக தன்னை நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது” என்று மனம் நொந்து கூறியிருப்பதும் – அவரது அடாவடித் தனத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது!

‘‘மக்கள் தீர்ப்பே இறுதி” என்ற அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மக்கள் திரளுவதுதான் ஒரே வழி!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைத் தேக்கத்திற்குரிய தாக்கி, நியமன அதிகாரியானவருக்கு எவ்வகையில் நியாயமோ,  உரிமையோ உண்டா என்ற கேள்வி எங்கும் எதிரொலிக்கட்டும்!

எதிர்ப்புப் புயல் மய்யம் கொண்டுள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *