ஆர்.என். ரவி தெரிவித்த கருத்துக்கு, முதலமைச்சர்  பதில்.

சட்டமன்ற நடைமுறை தொடர்பாக,  தமிழ்நாடு ஆளுநர்
ஆர்.என். ரவி தெரிவித்த கருத்துக்கு, முதலமைச்சர்  பதில் அறிக்கை

பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப்
பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர்
ஆர்.என்.இரவி தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக
உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில்
தெரிவித்து, நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு
எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது
கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்
பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள்,
சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி,
தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தனது கடமைகளில்
இருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி
வழக்கமாக வைத்துள்ளார்கள். அதற்கு முறையான காரணத்தையும்

2

அரசுக்குத் தெரிவிப்பதும் இல்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி
வைக்கப்பட்டுள்ளன.

இவை ஆளுநரின் கடமை தவறுதல் மட்டுமல்ல, செயல்படாத
முடக்குவாதச் செயலாகவே அமைந்துள்ளது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால்,
ஏதாவது ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு,
தனது கடமை முடிந்ததாக இருக்கிறார் ஆளுநர். உதாரணமாக, எளிய
மனிதர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் வகையில், சட்டமன்றத்தில்
நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் என்பது மிகமிக அவசர,
அவசிய நோக்கத்தோடு இயற்றப்பட்டது ஆகும். முதலில் ஏதோ உப்புச்சப்பற்ற
கேள்வியைக் கேட்டார். பின்னர், 'இந்த சட்டம் இயற்றும் உரிமையே மாநில
அரசுக்கு இல்லை' என்றார். 'மாநில அரசுக்கே உரிமை உண்டு' என்று ஒன்றிய
அமைச்சர்களே சொன்னபிறகும் இங்கிருக்கும் ஆளுநர் அதனை ஏற்கவில்லை.
ஏனெனில், ஏற்க மனமில்லை. இத்தனை உயிர்கள் பலியான பிறகும்
கரையாததாக ஆளுநரின் மனம் இருப்பது அதிர்ச்சியையே தருகிறது.

சட்டம் அறிந்தவர் போல் கருத்துக்களைத் தெரிவித்து வரும் ஆளுநருக்கு,
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதாவைத் திரும்ப அனுப்பிட
அதிகாரம் கிடையாது. ஆனால், ஆளுநர் அவர்களாலேயே
பரிந்துரைக்கப்பட்டு, சட்டமன்றத்தால் ஏற்பளிக்கப்பட்டு, மாண்புமிகு
பேரவைத் தலைவர் அவர்களால் பண மசோதா என்று 20-10-2022 அன்று
சான்றளிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி மசோதாவை, அவர் 6-3-2023 அன்று

3

திரும்ப அனுப்பியது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என்பதை அவர்
தெரிந்தும் செய்துள்ளாரா என்பதை பொது மக்களின் கருத்துக்கே விட்டு
விடுகிறேன்.

இந்த நிலையில், இன்றைய தினம் ஆளுநர்  தெரிவித்துள்ள
கருத்து, அவர் வகிக்கும் பதவிக்கு அழகும் அல்ல. அவர் அப்படிப் பேசிய இடம்
முறையான இடமும் அல்ல. 'கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே
அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள்
நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை
நிறுத்தி வைப்பு என்கிறோம்' என்று பேசி இருக்கிறார் ஆளுநர்.
மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்கள் மத்தியில் இப்படி பேசி
இருக்கிறார்.

ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியாக தான்
எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாகக்
கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல்
ஆகும்.அரசின் சுருக்கெழுத்து தான் ஆளுநர் என்று சுருக்கமாகச் சொன்னார்கள்.
அதனை மறந்துவிட்டு, 'தி கிரேட் டிக்டேட்டராக' தன்னை ஆளுநர் நினைத்துக்
கொள்ள வேண்டாம்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதா தவிர, பிற வகை
மசோதாக்களை ஆளுநர், அரசுக்குத் திருப்பி அனுப்பலாம். சட்டமன்றம்,
மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதனை
ஆளுநர் அவர்கள் நிராகரிக்க முடியாது. எனவே, ஆளுநர் அவர்கள் கேட்ட
விளக்கங்களைக் கொடுத்து, மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த பிறகும்
ஒப்புதல்கள் வழங்காமல் இருப்பது சட்டமுறையும் ஆகாது. சட்டம் அறிந்தவர்
முறையும் ஆகாது. இதனை நமது மாநிலத்தின் நிருவாகத்தினை முடக்கும்
செயலாகவே எண்ண வேண்டியுள்ளது.

எதையும் துணிச்சலாக ஏற்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில்
போடுவது என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்பவருக்கு
அழகல்ல. அதையும் தாண்டி, அதனை சட்டபூர்வமற்ற பொதுவெளியில்
பகிர்ந்து கொள்வதோடு, நியாயப்படுத்திட முயல்வது என்பது மிகமிக
மோசமான முன்னுதாரணம் ஆகும். தான் சொன்ன கருத்தைத் திரும்பப்
பெறுவதே ஆளுநர் அவர்கள் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு
உண்மையாக நடந்து கொள்வது ஆகும்.

5ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் தமிழ்நாடு
சட்டமன்றத்தின் மாண்பினைக் குறைக்கும் வகையில் ஆளுநர் பேசி
வருவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. இதனை
உணர்ந்து, அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், அரசியலமைப்புச்
சட்டத்தில் ஆளுநர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக
நிறைவேற்றிடும் வகையில் அவர் செயல்படுவார் என நான் நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *