7 லட்சம் லாபம்
ஒரு ஏக்கரில் ஒரு முறை நடவு செய்யும் வெற்றிலைக் கொடியை முறையாக பராமரித்து வரும்போது கூடுதல் மகசூல் கிடைத்தால் இரண்டரை வருடத்தில் அனைத்து செலவுகளும் கழித்துபோக ரூ.7 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் என்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுப்பிரமணியன். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மேலாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு ஆத்தூர் கிராமத்தில் இயற்கை முறையில் வெற்றிலை விவசாயம் செய்துவரும் விவசாயி சுப்பிரமணியனை அவரது வயலில் சந்தித்து வெற்றிலை விவசாயம் குறித்து பேசினோம். நான் கடந்த 25 வருடங்கள் வெற்றிலை விவசாயம் செய்து வருகிறேன். எனது அப்பா, தாத்தா ஆகியோர் வெற்றிலை விவசாயம் செய்துவிற்பனையும் செய்தனர். தெற்கு ஆத்தூர் பகுதியில் தற்போது 1 ஏக்கர் நிலத்தில் 10 பேர் சேர்ந்து கூட்டு விவசாயம் செய்து வருகிறோம். இதன் மூலம் விவசாய செலவுகளை பகிர்ந்து கொள்வதோடு, பராமரிப்பு வேலைகள், விற்பனை போன்றவற்றை ஒன்றாக இணைந்து செய்கிறோம்.
ஒரு ஏக்கர் நிலத்தில் வெற்றிலை கொடிக்கால் அமைப்பதற்கு முதலில் அந்த வயலைச் சுற்றி காற்று புகாதபடி 15 அடி உயரத்தில் வேலி அமைக்க வேண்டும். அந்த வேலியை ஒட்டி வயலைச் சுற்றிலும் கற்பூரவள்ளி, கதலி, கோழிகூடு மற்றும் நாட்டு வாழை ரகங்களை வைத்துள்ளோம். 1 ஏக்கர் நிலத்தில் வெற்றிலைக் கொடிகளை நடுவதற்கு ஏற்ப 2 அடி உயரம் 4 அடி அகலமுள்ள பட்டம் அல்லது கன்னிகள் 100 எண்ணம் அமைத்துள்ளோம். ஒரு கன்னிக்கும் மற்றொரு கன்னிக்கும் இடையே 2 அடி அகலமுள்ள கிடங்கு மூலம் நீர்ப்பாசனம் செய்வோம். தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீர், ஆற்றுநீர் மூலம் பாசனம் செய்கிறோம். மழை பொய்த்து தண்ணீர் இல்லாதபோது போர் அமைத்து மோட்டார் மூலம் நீர்ப்பாசனம் செய்கிறோம்.
4 அடி அகலமுள்ள பட்டத்தில் இருபுறமும் அரை அடி இடைவெளியில் வரிசையாக அகத்தி விதைகளை ஊன்ற வேண்டும். 40 நாட்களில் அகத்தி வளர்ந்துவிடும். பின்னர் அகத்திக்காலின் இடையே வெற்றிலைக் கொடியை நடவு செய்ய வேண்டும். அதன்பிறகு 40 நாட்கள் கழித்து வளர்ந்துவரும் வெற்றிலைக் கொடிக்கு மிதமான வெயில் கிடைக்கும்படி அகத்தியின் கிளைகளை இடுங்கி அகற்ற வேண்டும். இதுபோல் 5வது மாதம் வரை செய்ய வேண்டும். பின்னர் இரண்டு பட்டத்தில் உள்ள அகத்திக்கால்களையும் இணைத்து நடுவில் ஒருகம்பு வைத்து வெற்றிலைக் கொடியின் வேருக்கு மிதமான வெயில் கிடைக்கும்படி வைத்து கட்ட வேண்டும். வெற்றிலைக்கொடி வளர்ந்த பிறகு அதை அகத்திக்காலோடு சேர்த்து 15 நாட்களுக்கு ஒருமுறை ஆக்கை எனப்படும் கோரைப்புல் மூலம் கட்ட வேண்டும். இதுபோல் 6 மாதங்கள்வரை ஆக்கை கட்டிவர வேண்டும். 6 மாதத்தில் முதல் மகசூல் கிடைக்கும். அதன்பிறகு மேல்நோக்கி வளர்ந்து செல்லும் வெற்றிலைக்கொடியை ஏணியின் உதவியோடு மடக்கி கட்டிய கொடியை விடுவித்து கீழே கொண்டு வந்து, இரண்டாக மடித்து பட்டத்தில் கொடி இல்லாத இடத்தில் வைத்து மண்போட்டு மூடிவிட வேண்டும். பின்னர் அந்த வெற்றிலைக்கொடியும் வளர ஆரம்பிக்கும். அது நன்கு வளர்ந்து கூடுதல் மகசூல் கிடைக்க கூடுதலாக அகத்திக்கால்களை நட்டு அதில் வளரும் கொடியை ஆக்கை மூலம் கட்ட வேண்டும். அதன்பிறகு 15 நாளுக்கு ஒருமுறை வெற்றிலை பறிக்கலாம்.
வெற்றிலைக்கு இயற்கை முறையிலான தொழுஉரம், புண்ணாக்கு, அகத்தி ஆகியவற்றையே உரமாகப் பயன்படுத்துகிறோம். கொடி வைத்த முதல் 4 மாதத்தில் உரம் வைப்போம். அதன்பிறகு 4 மாதங்களுக்கு ஒருமுறை உரம் ைவக்க வேண்டும். ஒருநாள்விட்டு ஒருநாள் கிடங்கு மூலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அப்போது அந்த கிடங்கில் உள்ள தண்ணீரை எடுத்து வெற்றிலைக்கொடிக்கு தெளிக்க வேண்டும். தினசரி கொடிக்காலை கவனித்துவர வேண்டும்.ஒருமுறை நடவு செய்த வெற்றிலைக்கொடியில் இருந்து இரண்டரை ஆண்டுகள் வரை வெற்றிலை பறிக்கலாம். வெற்றிலை பறிக்க கைவிரல்களில் உலோகத் தகட்டில் செய்த செயற்கை நகங்களை பயன்படுத்துவதால் வேகமாக வெற்றிலை பறிக்க முடியும். இரண்டரை ஆண்டுகளில் 6 மாத இடைவெளியில் 1பூ வீதம் 5பூ பறிக்கலாம். வெற்றிலைக்கொடி வைத்து முதல் 8 மாதம் வரையுள்ள பயிரை கொழுந்து என்றும், அதன்பிறகு இளம்பயிர் என்றும், கடைசி 6 மாத காலத்தை முதுகால்பயிர் என்றும் 3 வகையாகப் பிரிக்கிறோம். வெற்றிலைக்கொடியில் இருந்து வளர்ந்துவரும் பெரியகாம்புள்ள முதல் ஒருவருடம் பறிக்கக்கூடிய கொழுந்து என்கிற முதல்ரக வெற்றிலைக்கு சக்கை என்று பெயர். இது ராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அடுத்து இளம்பயிரான மாற்று என்கிற இரண்டாவது ரகம் கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்திலுள்ள பிற மாவட்டங்களுக்கு செல்கிறது. மூன்றாவது ரகமான முதுகால் பயிர் என்கிற பொடிவெற்றிலை உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர்களில் வியாபாரம் செய்யப்படுகிறது.
நாங்கள் உற்பத்தி செய்யும் வெற்றிலையை ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் மூலம் வியாபாரிகளிடம் விற்பனைக்கு கொடுப்போம். முதல் ரகமான சக்கை, இரண்டாவது ரகமான மாற்று வெற்றிலைக்கு ஒரு கிலோவுக்கு விவசாயிக்கு தற்போது ரூ.250 வரை கிடைக்கிறது. இதை வாங்கும் வியாபாரிகள் அதை ரூ.320 வரை விற்கின்றனர். வெற்றிலை கொடிக்கால் அமைக்கையில் ஒருகன்னிக்கு ரூ.7 ஆயிரம் வீதம் 100 கன்னிக்கு ரூ.7 லட்சம் வரை செலவாகும். இதில் முதலில் வேலி அமைத்தல், கன்னி அமைத்தல், கொடிநடவு, கொடிகட்டுதல், உரம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து ரூ.7 லட்சம் வரை செலவாகும். ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்த வெற்றிலைக்கொடியை முறையாக பராமரித்து வருகையில், கூடுதல் மகசூல் கிடைத்தால் இரண்டரை வருடங்களில் ரூ.14 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இதன்மூலம் செலவுகள் அனைத்தும் கழித்துபோக ரூ.7 லட்சம்வரை லாபம் ஈட்டலாம். இந்த லாபமானது வெற்றிலையின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வெற்றிலை மகசூல் அதிகரிப்பதைப் பொறுத்து மாறுபடும். ஒரு ஏக்கரில் வெற்றிலை விவசாயம் செய்கையில் நேரடியாக 50 பேருக்கும் மறைமுகமாக 100 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இங்குள்ள அகத்தி கீரைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக உள்ளது.
வெற்றிலையில் ஏற்படும் இலைச்சுருட்டு, இலைப்புள்ளிநோய், கொடியில் கரும்புள்ளிநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேளாண்துறை மூலம் இயற்கை உரங்கள் போன்ற இடுபொருட்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும். மேலும் அரசு மானிய முறையில் கடனுதவிகள் வழங்கினால் வெற்றிலை விவசாயிகளின் பொருளாதார பிரச்னைகளுக்கு உதவியாக இருக்கும் என்கிறார் விவசாயி சுப்பிரமணியன். ஆத்தூர் வெற்றிலை மற்றும் விவசாயிகளுக்கான சங்கம் குறித்து ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க தலைவர் சதீஸ்குமாரிடம் பேசியபோது “ஆத்தூர் முதல் ஏரல் வரையுள்ள ஆத்தூர், மேலாத்தூர், ஆவரையூர், தளப்பண்ணை, சேர்ந்தபூமங்கலம், சொக்கபழங்கரை, நெடுங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பத்தினருக்கு வருமானம் கிடைக்கிறது. தாமிரபரணி ஆற்றுநீர் மற்றும் இப்பகுதி மண்ணின் தன்மை காரணமாக ஆத்தூர் பகுதியில் உற்பத்தியாகும் வெற்றிலை 10 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் என்பது அதன் தனிச்சிறப்பு. ஆத்தூர் வெற்றிலைக்கு தனி மவுசு உள்ளதால், அது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
விவசாயிகள் சார்பில் தேர்வு செய்து, 10 பேர் கொண்ட குழு அமைத்து வெற்றிலை மார்க்கெட்டின் விலைக்கு ஏற்ப அந்த குழுவினரால் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சங்கத்தின் வளர்ச்சிக்காக 1 கிலோ வெற்றிலைக்கு 2 ரூபாய் வீதம் சந்தா விவசாயிகளிடம் இருந்து பெறப்படுகிறது. அந்த சந்தாவின் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் சங்கத்தின் மூலம் செய்யப்படுகிறது. வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து சங்கம் நிர்ணயித்த விலையில் வெற்றிலையை கொள்முதல் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைப்பதோடு, ஆத்தூர் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைய அரசு நடவடிக்கை எடுத்தால் வெற்றிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்” என்று கூறினார். விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த வெற்றிலை கமிஷன் வியாபாரி சிவசுப்பிரமணியனிடம் வெற்றிலை ஏற்றுமதி, வியாபாரம் குறித்து கேட்டபோது, “சங்கத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் வெற்றிலையை தரம் பிரித்து கட்டி விற்பனை செய்கிறோம். வெற்றிலையை கட்டுவதற்கான நார்களை இங்குள்ள தொட்டிகளில் நனையவைத்து பின்னர் எடுத்து கட்டுகிறோம். 100 எண்ணம் வெற்றிலைகளை ஒரு கவுளி என்றும், இதுபோல் 35 கவுளிகள் எண்ணமுள்ள முதல் ரகமான சக்கையை ஒரு கூடையில் வைத்து பேக்செய்து ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் ஆகிய வெளி மாநிலங்களுக்கு அனுப்புகிறோம். 2வது ரகமான மாற்று வெற்றிலையை 120 கவுளிகள் உள்ள ஓர் அடுக்காக கட்டுவதை பிண்டி என்கிறோம். இந்த பிண்டியானது வாழை இலை மற்றும் வாழைநார் மூலம் கட்டப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. 3ம் ரகமான ராசி என்கிற பொடிவெற்றிலை 25 கவுளிகள் எண்ணம் கொண்டதை முட்டி என்கிறோம். முட்டியாக கட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
உள்ளூரில் தற்போது வெற்றிலை பெரியளவில் விற்பனை ஆவதில்லை. இந்த ஆண்டு பருவமழை சரியாக இல்லாததால் மகசூல் குறைவாக உள்ளது. தற்போது வெற்றிலை விலை சற்று கூடியுள்ளது. 1 கிலோ அளவுள்ள முதல்ரகமான சக்கை ரூ.300க்கும், இரண்டாம் ரகமான மாற்று ரூ.270க்கும், கடைசி ரகமான ராசி என்கிற பொடிவெற்றிலை ரூ.240க்கும் விற்பனையாகிறது. இந்த விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் இருக்கும். ஆத்தூர், தென்காசி, சோழவந்தான் பகுதிகளில் 1 கிலோ வெற்றிலை பறிக்க ரூ.30 கூலி கொடுக்கப்படுகிறது. நல்ல மகசூல் இருக்கும்போது ஒருநபர் ஒருநாளில் அதிகபட்சம் 35 கிலோ வரை பறிக்கலாம். இதன்மூலம் ஒருநபர் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். தாமிரபரணி ஆற்றுநீர் வரக்கூடிய வைகுண்டம் அணைக்கட்டு தென்கால் வாய்க்கால் மற்றும் ஆத்தூர் குளத்தை வருடம் ஒருமுறை கட்டாயம் தூர்வார சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காவிட்டால் டீசல் என்ஜின் பயன்படுத்தி போர் மூலம் வெற்றிலைக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதோடு உற்பத்தி பெரிதும்
பாதிக்கப்டுகிறது.
பல்வேறு மருத்துவ குணமுடைய ஆத்தூர் வெற்றிலை தமிழ்நாட்டில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, கரூர் போன்ற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. மேலும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. கடந்த காலங்களில் கந்தகார், காபூல் ஆகிய ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சாலை வழியாக ஆத்தூர் வெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசியல் உள்ளிட்ட பல காரணங்களால் வெற்றிலையை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. வெற்றிலையை மைக்ரோஸ்கேனிங் செய்கையில் அதில் வைரஸ், பாக்டீரியாக்கள் இருப்பதால் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவதில்லை. வெற்றிலை தற்போது பணப்பயிராக உள்ளது. அதை மருத்துவப் பொருளாக மாற்றினால் வெளிநாடுகளுக்கு அனுப்ப வழி ஏற்படும். இதனால் வெற்றிலை விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் பொருளாதார நிலை உயரும்” என்று கூறினார்.
தொடர்புக்கு: