ஆட்டம் கண்ட அமெரிக்கா.. 170 மைல் வேகத்தில் தாக்கிய சூறாவளி .

நியூயார்க்: அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்திருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.அமெரிக்காவில் ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதிகளில் கடுமையான புயல் வீசும் என்று அந்நாடு வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி ஆர்கன்சாஸ், ஒக்லகாமா, இல்லினாயிஸ், டென்னசி, அயோவா, மிசிசிபி ஆகிய மாகாணங்களில் சுமார் 60 சூறாவளி உருவாகியுள்ளது. 24 மணி நேரத்தில் உருவான இந்த சூறாவளி காரணமாக இந்த பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள், மரங்கள் என அனைத்தும் சரிந்து விழுந்துள்ளன. இதில் கொடுமை என்னவெனில் வடக்கு இல்லினாய்ஸில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் சுமார் 260 பேர் படம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது சூறாவளி தாக்கியதில் தியேட்டர் இடிந்து விழுந்திருக்கிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார். 28க்கும் அதிமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கிழக்கு ஷெர்மன் பகுதியில் சூறாவளி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், இந்தியானா மற்றும் டென்னசி தவிர மற்ற பகுதிகளில் சூறாவளி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சூறாவளி கடந்து சென்று 24 மணி நேரத்திற்கும் மேல் ஆன நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்புகளுடன் பொருளாதார பாதிப்புகளும் மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது.இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், “நான் இந்த பகுதியில் 1985ம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வருகிறேன். ஆனால் இந்த சூறாவளியானது இந்த பகுதியை அடையாளம் தெரியாத பகுதியாக புரட்டி போட்டிருக்கிறது. சூறாவளியின் தாக்கத்திற்கு பின்னர் நான் எங்கு இருக்கிறேன் என்பதையே என்னால் சரியாக கணிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு சூறாவளி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறியுள்ளார்.கடந்த வாரம்தான் கடும் மழை காரணமாக பழமையான சுவர் இடிந்து விழுந்ததில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தின் வடு மறைவதற்குள் மற்றொரு சோக சம்பவம் அரங்கேறியிருப்பது அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தொடர் புயல் பாதிப்பு காரணமாக ஆர்கன்சாஸ் பகுதியில் அவசர நிலையை ஆளுநர் அறிவித்துள்ளார். இதனையடுத்து மிசோரியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், எனவே மக்கள் கவலையடைய வேண்டியதில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது. மட்டுமல்லாது இந்த பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீள சில மாதங்கள் வரை ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *