சென்னை: கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் 2வது நாளாக மாநில மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.
கலாஷேத்ரா முதல்வர்,இயக்குனர், துணை இயக்குனர்கள் உள்பட 6 பேரிடம் நேற்று விசாரணை நடத்தினர். மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்திய நிலையில் மனித உரிமைகள் ஆணையம் 2ம் நாளாக விசாரணை நடத்தியது.
கலாஷேத்ராவில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில் கடந்த வாரம் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக தற்காலிக பணியாளர்கள் 3 பேர் கலாஷேத்ராவில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தியது. அதேபோல் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியும் நேரடியாக வந்து விசாரணை நடத்தி இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலாளரிடம் அறிக்கையை சமர்பித்திருந்தார்.
இதையடுத்து மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் கலாஷேத்ராவில் நேற்று முதல்வர்,இயக்குனர், துணை இயக்குனர்கள் உள்பட 6 பேரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது. இந்நிலையில் இன்று தேர்வுகள் முடிவடைந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆகியோரிடம் மாநில மனித உரிமை ஆணையம் தனித்தனியாக விசாரணை நடத்தியது.
கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை தற்போது நிறைவு பெற்றது.