அரசு தோட்டக்கலை பண்ணையில் நடைபெற்று வரும் பணிகள்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர்; ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் நகராட்சித்துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பூவாணி, அரசு தோட்டக்கலை பண்ணையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து பார்வையிடப்பட்டு, அங்கு மா, கொய்யா, பப்பாளி, நெல்லி, சப்போட்டா, மாதுளை உள்ளிட்ட மரக்கன்றுகள் பல்வேறு இரகங்களின்; தாய்ச்செடிகளாக நடவு செய்யப்பட்டு உற்பத்தி செய்தல், தாய்ச்செடிகளில் இருந்து ஒட்டு பழச்செடிகள்;, தக்காளி, கத்தரி மற்றும் மிளகாய் ஆகிய காய்கறி குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து விவசாயிகளுக்கும் விநியோகம் செய்யப்படும் பணிகள்  குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

பின்னர், திருவண்ணாமலை ஊராட்சி, இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.18 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களையும்,
திருவில்லிபுத்தூர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.150 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் எல்.பி.ஜி மின் மயான தகன மேடை அமைக்கும் பணிகளையும், நல்லகுற்றாலபுரம் அசோக் நகர் பகுதியில் ரூ.41 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பூங்கா அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், மல்லி ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் பயன்பெற்று வரும் பயனாளியிடம், சிகிச்சை முறைகள், மருந்துகள் வழங்கப்படும் முறை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.

பின்னர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அயன்நாச்சியார்கோவில் கிராமத்தில் 3 ஏக்கர் நிலத்தில் நிர்மல் இரக உளுந்து பயிரிட்டுள்ள திரு.சீனிவாசன் விவசாயியின் நிலத்தில் விளைச்சலை மேம்படுத்தும் நோக்கில் உளுந்து பயிருக்கு டிரோன் மூலம் 2 சதவீத டிஏபி கரைசலை தெளித்தல் செயல்விளக்கம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து, பிள்ளையார்குளம் ஊராட்சியில், இலவச வீட்டுமனை பட்டாவுடன் கூடிய பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மொத்தம் 114 பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளையும் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 5 கட்டங்களாக தலா 90 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களையும் தன்னிறைவு பெறச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அனைத்துக் கிராமங்களில் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவை அடைந்திட வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் உழவர் நலன் சார்ந்த பிற துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும், வேளாண்மையில் மகசூல் பெருக்கம் அடைந்திடவும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படுத்தும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில்  செயல்படுத்தப்படுகிறது.

நகராட்சிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் எல்.பி.ஜி மயானம் அமைத்தல், பூங்காக்கள், நீர்நிலைகள் பாதுகாத்தல், பேருந்து நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும், தகவல் தொழில் நுட்ப பிரிவில் வீட்டிலிருந்து பணிபுரிவது எதிர்காலங்களில் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டும், வேலைநாடுபவர்கள் தங்கள் திறமைகளை வளர்க்கும் வகையிலும், அதிவேக இணையதள வசதியுடன் கூடிய அறிவுசார் மையம் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ உட்கட்டமைப்பை மேம்டுத்தும் வகையில் பல்வேறு புதிய கட்டிடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கர்ப்பமடைந்த தாய்மார்களுக்கு இரத்தசோகை பாதிப்பை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போன்று வேளாண்மை, தோட்டக்கலை, ஊராட்சித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் வளர்ச்சி மற்றும் சேவைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., அவர்கள் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் பயணத்தின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வேளாண்மை இணை  இயக்குநர் திரு.உத்தண்டராமன், மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியாரம்மாள், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.ராதாகிருஷ்ணன், திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் திரு.ராஜமாணிக்கம், திருவில்லிபுத்தூர் நகராட்சி பொறியாளர்  திரு.தங்கபாண்டியன், திருவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி மீனாட்சி, திரு.சிவக்குமார், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் திரு.ரங்கசாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *