அகிலேஷ் யாதவ், முதல்வர் மம்தா பானர்ஜியை இல்லத்தில் மார்ச் 17-ம் தேதி சந்தித்தார்.

பா.ஜ.க-வையும் காங்கிரஸையும் சம தூரத்தில் வைப்பது என்ற நிலைப்பாட்டிலிருந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சி நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் சந்தித்துப் பேசியிருக்கிறார்.சமாஜ்வாதி கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கொல்கத்தாவுக்கு சென்றிருந்த அகிலேஷ் யாதவ், முதல்வர் மம்தா பானர்ஜியை அவரின் இல்லத்தில் மார்ச் 17-ம் தேதி சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ், “2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் அல்லாத புதிய அணி ஒன்று உருவாகும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டன. தற்போது, பா.ஜ.க அரசும் அதையே செய்கிறது. காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டதைப் போலவே, பா.ஜ.க-வும் தோற்கடிக்கப்படும்” என்றார் .பா.ஜ.க-வை எதிர்க்கும் தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகள், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருக்கின்றன. 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.இன்னொருபுறம், பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்க்கும் சில கட்சிகள், பா.ஜ.க-வுக்கு சமமாக காங்கிரஸையும் எதிர்க்கின்றன. அவற்றில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முக்கியமானது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளும் காங்கிரஸை எதிர்க்கின்றன.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரும் காங்கிரஸை எதிர்க்கிறார்கள். இத்தகைய சூழலில்தான், நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு காலமே இருக்கும் நிலையில் புதிய அணியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் இந்தக் கட்சிகள் இறங்கியிருக்கின்றன.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுதீப் பந்தோபாத்யாயா, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும். ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவோம். அந்த வகையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை மம்தா பானர்ஜி மார்ச் 23-ம் தேதி சந்திக்கவிருக்கிறார். பா.ஜ.க-வையும் காங்கிரஸையும் சமதொலைவில் வைத்து எதிர்ப்பதற்கான திட்டம் குறித்து விவாதிக்க மற்ற கட்சிகளுடன் விவாதிப்போம்” என்றார்.மேலும், “மூன்றாவது அணியை உருவாக்குகிறோம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், பிராந்திய அளவில் பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கான பலம் கொண்ட கட்சிகளுடன் பேசுகிறோம். எதிர்க் கட்சிகளின் ‘பிக் பாஸ்’ ஆக காங்கிரஸ் இருக்கிறது என்று நினைப்பது தவறு. நரேந்திர மோடி எளிதாக வெற்றிபெறலாம் என்பதற்காக, எதிர்க் கட்சிகளின் முகமாக ராகுல் காந்தி இருக்க வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது” என்றார் சுதீப் பந்தோபாத்யாயா.மம்தாவுக்கும் அகிலேஷுக்கும் நல்ல உறவு இருக்கிறது. 2021-ல் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு அகிலேஷ் ஆதரவு தெரிவித்தார். அதேபோல, உ.பி சட்டமன்றத் தேர்தலில், அகிலேஷுக்கு ஆதரவாக மம்தா பிரசாரம் செய்தார்.வில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “தற்போது எதிர்க் கட்சிகளின் அணியை உருவாக்குவதற்கான முயற்சி நடைபெற்றுவருகிறது. அதற்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஆகியோர் முயற்சி மேற்கொண்டுவருகிறார்கள்” என்றார்.அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. அதனுடைய பங்கு என்னவென்பதை அந்தக் கட்சிதான் முடிவுசெய்ய வேண்டும்” என்றார் அகிலேஷ்.திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பாரத் ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளால், தங்கள் மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லாமலே தேர்தலில் வெற்றிபெற்றுவிட முடியும். சில கட்சிகளுக்கு காங்கிரஸுடன் கூட்டணி சேராமல் போட்டியிடுவது, அவர்களின் வெற்றிக்கு உதவிசெய்யும்.எனவே, இந்தக் கட்சிகள் அகில இந்திய அளவில் அனைத்து எதிர்க் கட்சிகளும் பா.ஜ.க-வுக்கும் எதிரான கைகோக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வர மறுக்கின்றன. இந்தக் கட்சிகள் காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணியை ஏற்படுத்தினால், பா.ஜ.க பலமடையவும், தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறவுமே அது வழிவகுக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *