தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதியியல் துறையில் 30.03.2023, 31.03.2023 ஆகிய
இரு நாட்களில் அகராதி உருவாக்கம் என்ற தலைப்பில் பன்னாட்டுப் பயிலரங்கம்
நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்
முனைவர் சி.அமுதா அவர்கள் தமிழ் சொற்களின் வரலாறு பற்றி இன்றைய மாணவர்கள்
ஆய்வு மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று தனது தொடக்க உரையில் கூறினார்கள்.
தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் அவர்களின் தலைமை உரையில்
பல்வேறு வகையான தமிழ் அகராதிகள் குறித்தும் அவைகளை மாணவர்கள் பயன்படுத்த
வேண்டும் என்றும் ஒலி, மாற்றொலி, ஒலியன் குறித்தும் விளக்கமாக பேசினார்கள்.
வாழ்த்துரை வழங்கிய மதிப்புயர் பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராசன் அவர்கள்
கடின சொற்களுக்கு பொருள் கூறுவது அகராதிகள் என்றும் கலைக் களஞ்சியங்களின்
முக்கியத்துவம் பற்றியும் கூறினார்கள்
வளர் தமிழ்ப்புலத் தலைவர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் அவர்கள் வழங்கிய
வாழ்த்துரையில் மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அதனைக் கையாளும்
விதத்தினையும் சிறப்பாக விளக்கினார்கள்.
கேரளப் பல்கலைக்கழக தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் ப.ஜெயகிருஷ்ணன்
அவர்கள் சங்க இலக்கிய சொற்கள் இன்றும் நம்மிடையே வழக்கில் இருப்பதையும்,
மலையாளம் தமிழ் மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.
தொடக்க விழாவிற்குப் பின் ஆறு அமர்வுகளாக பொழிவுகள் நிகழ்த்தப்பட்டது. முதல்
அமர்வில் அகராதி உருவாக்கப் படிநிலைகள் என்ற தலைப்பில் முனைவர் க.உமாராணி
சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி, திருச்சி அவர்கள் உரையாற்றினார்கள். இரண்டாவது
அமர்வில் சொல்லடைவு – உருவாக்கம் என்ற தலைப்பில் முனைவர் அ.ஹெப்சி ரோஸ்மேரி
அவர்கள் உரையாற்றினார்கள். மூன்றாவது அமர்வில் மின் அகராதிகள் என்ற தலைப்பில்
முனைவர் கு.சரளா பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி அவர்கள் உரையாற்றினார்கள்.
இரண்டாவது நாள் நிழ்வில் நான்காவது அமர்வாக கலைச்சொற்கள் உருவாக்கமும்
தரப்படுத்துதலும் என்ற தலைப்பில் முனைவர் கி.அரங்கன் தமிழ்ப் பல்கலைக்கழம் அவர்கள்
உரையாற்றினார்கள். ஐந்தாவது அமர்வாக வட்டார வழக்கு அகராதிகள் என்ற தலைப்பில்
முனைவர் இரா.இரவிக்குமார் கொங்கு மன்டல ஆய்வு மையத் தலைவர் அவர்கள்
உரையாற்றினார்கள். ஆறாவது அமர்வில் மொழிபெயர்ப்பில் – சொற்பொருள் என்ற
தலைப்பில் பேராசிரியர் மதுரா சிவக்குமரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
அவர்கள் உரையாற்றினார்கள்.
ஒவ்வொரு அமர்விலும் மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இலங்கை மற்றும்
தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து ஆய்வாளர்களும் முதுகலைத் தமிழ்ப் பயிலும்
மாணவர்களும் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.
31.03.2023 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில் பயிலரங்க இணை
ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.வீரமணி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். விழாப்
பேருரையாக முனைவர் ச.திருஞானசம்பந்தம் தமிழ்ப் பல்கலைக்கழகம் அவர்கள்
தமிழ்மொழியை பிழையின்றி தூய தமிழில் பேசவும் எழுதவும் மாணவர்கள் முன்வர வேண்டும்
என்றும், ஒவ்வொரு வட்டாரங்களிலும் பேசப்படும் வழக்குச் சொற்கள் பற்றி பல்வேறு
எடுத்துகாட்டுகள் மூலம் விளக்கினார்கள். இந்நிகழ்வில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு
சான்றிதழ் வழங்கப்பட்டது.
இப்பன்னாட்டுப் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர், அகராதியியல் துறைத் தலைவர்
முனைவர் செ.த.ஜாக்குலின் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுபெற்றது.