விமர்சனங்களுக்கு பதிலாக அமைந்த வூஹானின் மறுமலர்ச்சி

சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவியபோது, முன்காணாத கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, முழு நகரும் மூடப்பட்டு நோய்தொற்று மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய பலரின் உழைப்பு ஆகியவற்றால் கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி அன்று வூஹானில் ஊரடங்கு நீக்கப்பட்டது. ஊரடங்கு நீக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. புதிய வசந்த மலர்கள் போல வூஹான் புதிய எழுச்சியுடன் தனது மிடுக்கான பயணத்தை தொடர்ந்து வருகிறது.
நோய் தொற்றின் தொடக்கத்தில் மக்களுக்கு நம்பிக்கை தரும் விதம், சீனாவின் உயர்நிலை மருத்துவ நிபுணர் சொங் நன் ஷன், “பண்டை காலத்திலிருந்தே வூஹான் நகர் பல்வேறு அறைகூவல்களை வென்றுள்ளது. இந்த நோய் அறைகூவலையும் அது வெல்லும்,” என்று தெரிவித்திருந்தார். அவர் கூறியதைப் போலவே, ஒரு சில மாதங்களுக்குள்ளேயே வூஹானில் ஊடரங்கு நீங்கி மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பி, தொற்றுக்கு முந்தைய வாழ்க்கையை மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது, நோய் தொற்று அச்சுறுத்தல் இல்லை என்றாலும், கட்டுப்பாடுகளில் சமரசம் இன்றி இயல்பு வாழ்க்கையை வாழ மக்கள் பழகிக் கொண்டனர். இது, பிற நாட்டவருக்கு எடுத்துக்காட்டு. அதனால்தான், வூஹானில் மட்டும்மல்ல, முழு சீனாவிலும் கூட இரண்டாவது அலை தொற்று என்ற அச்சம் எழவே இல்லை.
வூஹானைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஃபெங் லியங் கூறுகையில், நோய் தொற்றுக் காலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு புதிய நம்பிக்கையாகப் பார்த்து வந்தேன். அக்குழந்தைகள் வழியாக வூஹானின் எதிர்காலத்தைக் கண்டு பெரும் களிப்புற்றேன் என்று தெரிவித்தார். அவர் கூறியதைப் போல, அன்று பிறந்த குழந்தைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, ஓராண்டுக்குப் பிறகு, இன்று வலுப்பெற்றிருக்கும். அவ்வாறே நகரும் வலுப்பெற்றுள்ளது. சீன மக்களின் ஒற்றுமையை மாதுளை பழ விதைகளுடன் ஒப்பிடப்படுவது உண்டு. மாதுளைப் பழத்துக்கு சீனத்தில் ஷிலியூ என்று பெயர். அப்போது, பிறந்த ஆண் குழந்தை ஒன்றுக்கு ஷிலியூ என்று அவரின் பெற்றோர் பெயர் சூட்டினர். சீன மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நோயை வென்றெடுக்க வேண்டும் என்ற எழுச்சியில் அப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சமீபத்தில் கொண்டாடப்பட்ட ட்சிங்மிங் திருவிழாவின் 3 நாள் விடுமுறை நாள்களில் ஹுபெய் மாநிலத்தில் 1.17 கோடி பேர் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாயகனாகப் போற்றப்படும் வூஹான் 10 முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது. எழுச்சியின் குறியீடாக வூஹான் மீண்டும் மாறியுள்ளது. கரோனா வைரஸ் தொடர்பாக வூஹான் மீது பழி தூற்றிய மேலை நாடுகள் மற்றும் ஊடகங்களுக்கு நகரின் இவ்வெழுச்சி தக்க பதிலடியாக இருக்கும்.
பாண்டுரங்கன், பெய்ஜிங்.