8.4 சதவீத வளர்ச்சி காணும் சீனப் பொருளாதாரம்

உலக அளவில் கொவைட்-19 தொற்றுநோய் பரவி இன்னும் வருகின்ற போதிலும், கடுமையான நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே சீனாவில் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. இதன் காரணமாக, கடந்த ஆண்டில் நேர்மறையான பொருளாதார வளர்ச்சி கண்ட ஒரே நாடாக சீனா விளங்கியது.
இந்நிலையில், இவ்வாண்டில் சீனப் பொருளாதாரம் 8.4 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. இது, கடந்த ஜனவரியில் ஐஎம்எஃப் மதிப்பிட்டதை விட 0.3 விழுக்காடு அதிகம். அத்துடன், 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு கிடைக்கும் மிக வலுவான வளர்ச்சியாகவும் இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா வைரஸ் பரவல் காலத் தொடக்கத்தில் சீனா மேற்கொண்ட திண்ணமான நடவடிக்கைகள் நல்ல பயன்களைத் தந்துள்ளன. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் தெட்ரோஸ் முன்பு கூறுகையில், திடீரெனப் பரவும் தொற்றுநோய் சமயத்தில், எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்குச் சீனாவின் செயல்பாடுகள் முன் உதாரணமாக உள்ளன என்று பாராட்டு தெரிவித்திருந்தார். சீனாவில் எதிர்பார்க்கப்படும் 8.4 விழுக்காடு பொருளாதார வளர்ச்சிக்கும் அது ஒரு காரணம் என்று ஐஎம்எஃப் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், பொது முதலீடு மற்றும் மத்திய வங்கியின் நிதி உதவி ஆகியவை பொருளாதாரம் மீட்சி அடைவதற்கு வலுவான காரணிகளாக விளங்கின என்றும் கூறப்பட்டுள்ளது.
தவிரவும், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடுகையில், சீனா ஏற்கெனவே, தொற்றுநோய்க்கு முந்தைய பொருளாதார நிலையை எட்டியுள்ளது. அதேசமயம், பிற நாடுகள், அந்த நிலையை எட்டுவதற்கு 2023ஆம் ஆண்டு ஆகும் என்று ஐஎம்எஃப் கூறியுள்ளது.
சீனப் பொருளாதாரம் தொடர்பான ஐஎம்எஃப்பின் மதிப்பீடு குறித்து அதன் தலைமைப் பொருளியளாலர் கீதா கோபிநாத் சிஜிடிஎன்-னுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “தொற்றுநோய் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதம் சீனா மிகச் சிறப்பாக செயலாற்றியது. உலக அளவில் உற்பத்திப் பொருள்களுக்கான தேவை அதிகரிப்புக்கு ஏற்ப சீனாவின் ஏற்றுமதி மிகப் பெரிய வளர்ச்சி கண்டது,” என்று தெரிவித்தார்.
உலகம் சிக்கலான நிலையில் உள்ள இச்சூழலில் பலதரப்புவாதம் முன்பில்லா அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. பலதரப்புவாதத்தைக் காக்க வேண்டும் என்று கூறி வரும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். இது குறித்து கீதா கூறுகையில், பலதரப்புவாத அமைப்பு முறையில் உலக அளவில் முக்கியப் பொருளாதார நாடாக சீனா உள்ளது. அந்த அமைப்புமுறையை மேலும் முன்னேற்ற சீனா பாடுபட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
பாண்டுரங்கன், பெய்ஜிங்.