டெல்லியில் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார்

புதுடெல்லி,செப்டம்பர்.08
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லியில் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து பேசினார்.

ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலாய் பட்ருஷேவ், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர், இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அசாதாரண சூழல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தேசிய பாதுகப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று தலைநகர் டெல்லியில் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலாய் பட்ருஷேவை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை நிகோலாய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அது குறித்து இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உயர்மட்ட அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.