டி.டி.வி. தினகரன் மகள் திருமணம் சசிகலா பங்கேற்கிறார்

திருவண்ணாமலை,செப்டம்பர்.15
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நாளை நடைபெறுகிறது.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி. டி.வி தினகரன், அனுராதா தினகரன் தம்பதியரின் மகள் ஜெயஹரிணி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார்- ராஜேஸ்வரி அம்மாள் ஆகியோரின் மகன் ராமநாதன் துளசி ஐயா வாண்டையார் திருமணம் திருவண்ணாமலையில் நாளை வியாழக்கிழமை நடக்கிறது.

இதையொட்டி திருமண நிச்சயதார்த்தம் இன்று மாலை 6.50 மணி முதல் 7.50 மணி வரை திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடக்கிறது.

இதனை தொடர்ந்து மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் அபர்ணா ஓட்டலில் இருந்து வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் வரை நடக்கிறது.

நாளை காலை 8.30 மணி முதல் 10 மணிக்குள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி புதிய மேடையில் திருமணம் நடைபெறுகிறது.

இதில் சசிகலா மற்றும் உறவினர்கள் பாஸ்கரன், சுதாகரன், ஸ்ரீதளாதேவி பாஸ்கரன், சிவக்குமார், வெங்கடேஷ், மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

ஏற்பாடுகளை விவேகானந்தம் முனையரையர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

திருமண விழாவையொட்டி திருவண்ணாமலை நகரில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.