உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் சீனாவின் மீட்சி

ஒரு வாகனத்தில் ஒரு பாகம் பழுதடைந்து விட்டால் பயணம் தடைபட்டு விடும் அல்லது ஆபத்தில் முடிந்து விடும், அவ்வாறுதான் ஒரு நாட்டின் இயக்கமும். கொவைட்-19 தொற்றுநோய் பல நாடுகளின் உள்கட்டமைப்பு வசதி, மருத்துவமனைகள், சிகிச்சை உபகரணங்கள் மற்றும் தயாரிப்பு என பலவற்றில் உள்ள பலவீனங்களை எடுத்துக்காட்டியுள்ளது. இத்தகைய அடிப்படை வசதிகளில் இருந்த குறைபாடுகளால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது; தொடர் நோய் பரவலால் பொது முடக்கம் தேவைப்பட்டது; பொது முடக்கத்தால் தொழில்துறை முடங்கி பொருளாதாரம் சரிவடைந்தது. ஒரு குறைபாடு, நீட்சி அடைந்து தொடர்ச்சியாக மற்ற குறைபாடுகளை உண்டாக்கியது.
மிக மோசமான மற்றும் சவால் நிறைந்த இவ்வாண்டில், உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் நேர்மறையான சமிக்கைகளைக் காட்டியது சீனப் பொருளாதாரம் மட்டுமே. அதற்கு, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளே காரணம் என்றால் மிகையல்ல. அதனைக் கொண்டிருந்ததால் கொவைட்-19 நோயை வெகுவிரைவில் சீனா கட்டுப்படுத்தியது; அவ்வாறு கட்டுப்படுத்தியதால் தொழில்துறையின் மீட்சி விரைவாகியது; அதனால், பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. ஒரு நல்ல அம்சம் மற்ற நல்ல அம்சங்களுக்கு வழிகோலின.
சீனப் பொருளாதாரம் வலுவாக செயல்படும் என்றும் சீன சந்தை மீது வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் நம்பிக்கை கொள்ளும் என்று பல பொருளாதார அமைப்புகள் மற்றும் பொருளியில் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். அடுத்த ஆண்டில் உலகப் பொருளாதாரத்தின் மீட்சியைச் சீனா முன்னின்று வழிநடத்தும் என்று கருதப்படுகிறது.
ஓஇசிடி என்று அழைக்கப்படக் கூடிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளரச்சிக்கான அமைப்பைச் சேர்ந்த தலைமை பொருளியலாளர் லாரென்ஸ் பூன்ஸின் மதிப்பீட்டில், ‘அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் ஒரு பகுதியைச் சீனப் பொருளாதாரம் வகிக்கும். நிலையான பொருளாதார மீட்சியானது எதிர்காலங்களிலும் தொடரும். சீனாவின் ஜிடிபியானது 2021இல் சுமார் 8 விழுக்காடாகவும், 2022இல் 5 விழுக்காடாகவும் இருக்கும்.’
வரிகள் தளர்வு, நுகர்வைத் தூண்டி சமூகப் பயன்களை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நிதிக் கொள்கைகளுக்குச் சீனா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் ஓஇசிடி மதிப்பிட்டுள்ளது.
ஓஇசிடியைப் போலவே சர்வதேசத் தர நிர்ணய அமைப்பான பிட்ச் ரேட்டிங்கும் சீனாவின் அடுத்த ஆண்டு வளர்ச்சியை வெகுவாகவே மதிப்பீடு செய்துள்ளது. ‘கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியுள்ள சீனாவில், பல குறியீடுகள் கொள்ளை நோய்க்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. இதனால், சீனப் பொருளாதார மீட்சியானது அடுத்த ஆண்டில் மேலும் சமநிலையுடன் இருக்கும்’ என பிட்ச் கணித்துள்ளது.
சீனாவின் மீது மேலை நாடுகள் பாராமுகத்துடன் செயல்பட்டாலும், கரோனா காலத்தில் சீனச் சந்தையில் மேலை நாட்டு நிறுவனங்களின் இயக்கம் வலுவாகவே இருந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையில் சீனாவில் செய்யப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை, கடந்த ஆண்டைக் காட்டிலும், 6.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷாங்காயில் உள்ள அமெரிக்க வணிக சம்மேளனத்தின் கருத்துக் கணிப்பில் 82 விழுக்காட்டு நிறுவனங்கள் சீனச் சந்தையிலிருந்து விலகப்போவதில்லை என்றும், பிரிட்டீஷ் வணிக சம்மேளனத்தின் கருத்துக் கணிப்பில், 82 விழுக்காட்டு நிறுவனங்கள் சீனாவில் சந்தை ஆற்றல் காரணமாக அடுத்த ஆண்டில் முதலீட்டை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
பாண்டுரங்கன், பெய்ஜிங்.