‘234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்’ :மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் கி.மீ. தூரம் சுற்றி வந்திருக்கிறேன். 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று உதயநிதியை ஆதரித்து வாக்கு கேட்டபோது மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

உதயநிதியை ஆதரித்து பிரசாரம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கடைசிக் கட்ட பிரசாரத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மேற்கொண்டார். அதன்படி அவர், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் தனது மகனான தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து ஐஸ்அவுஸ் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது மு.க.ஸ்டாலின் ‘உதயசூரியன்‘ சின்னத்துக்கு வாக்குகள் திரட்டி பேசியதாவது:-
உதயநிதி ஸ்டாலினுக்கு ஓட்டு கேட்க வந்திருக்கிற நேரத்தில், என் மனதில் என்ன ஓடுகிறது என்றால், நான் முதன் முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்றபோது கருணாநிதி எனக்காக ஓட்டு கேட்டார். கருணாநிதி ஓட்டு கேட்டபோது, ‘தமிழ்நாடு முழுவதும் ஓட்டுகேட்டு சுற்றி வந்திருக்கிறேன். கடைசியாக ஆயிரம்விளக்கு தொகுதியில் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். இங்கே இருக்கிற மக்கள் உன் பிள்ளைக்கு (மு.க.ஸ்டாலின்) ஓட்டு கேட்க மாட்டீர்களா? என்று கேட்டுவிடக் கூடாது என்பதற்காக ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்’ என்றார்.அதே மாதிரிதான் நானும், உதயநிதிக்கு ஓட்டு கேட்டு வரலையே? என்று நீங்கள் கேட்டுவிட கூடாது என்பதற்காக தான் இப்போது உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்.

ஆளுங்கட்சிக்கு தோல்விபயம்
இந்த தொகுதிக்கு பெரிய சிறப்பு உண்டு. கருணாநிதி இந்த தொகுதியில் 3 முறை போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற தொகுதி. அதே போன்று பேராசிரியர் அன்பழகன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொகுதி. இப்படி வரலாற்று சிறப்பு பெற்ற இந்த தொகுதியில் கருணாநிதியின் பேரனாக இருக்க கூடிய என்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக நிற்கிறார். அவரை சிறப்பான முறையில் நீங்கள் வெற்றி பெற வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.ஆளுங்கட்சிக்கு கருத்து கணிப்புகள் கிலியை, பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அச்சம், தோல்வி பயம் காரணமாக இன்று (நேற்று) காலையில் எல்லா பத்திரிகைகளிலும் பக்கம், பக்கமாக விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு தி.மு.க. பெற போகிற வெற்றியை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்பதற்கான முயற்சியில் ஆளுங்கட்சி ஈடுபட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருக்கிறது. ஒரு வாதத்துக்கு சொல்கிறேன். அவர்கள் (அ.தி.மு.க.) போட்டிருக்கும் விளம்பர செய்தி உண்மையாகவே இருந்திருந்தால், நம் மீது வழக்கு போட்டிருக்க வேண்டும். நம்மை கைது செய்திருக்க வேண்டும். அதற்குரிய தண்டனையை கொடுத்திருக்க வேண்டும். கொடுத்தார்களா? இல்லை. ஆனால் நேர்மாறாக ஆட்சியில் இருக்கிறவர்களுடைய யோக்கியதை என்னவென்றால், முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா டான்சி வழக்கில் ஊழல் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டு சிறைக்கு போன வரலாறு தான் அ.தி.மு.க.வின் வரலாறு.

234 தொகுதிகளிலும் வெற்றி
2 நாட்களுக்கு முன்னால் என்னுடைய மகள் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு செய்தார்கள். அவர்கள் காலை முதல் இரவு வரை வீட்டில் உட்கார்ந்து டி.வி. பார்த்தார்கள். டீ குடித்தார்கள். பிரியாணி வாங்கிட்டு வர சொல்லி சாப்பிட்டுவிட்டு போனார்கள். அப்போது அவர்கள், ‘உங்களுக்கு 25 ‘சீட்‘ இன்னும் அதிகம் கிடைக்க போகிறது’ என்று சொல்லிவிட்டு போய் இருக்கிறார்கள்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, ‘குறைந்தது 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் (தி.மு.க. கூட்டணி) வெற்றி பெற போகிறோம்’ என்று நான் சொன்னேன். 20 நாட்களாக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் என்னுடைய சுற்றுப்பயணம் அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 12 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சுற்றி வந்திருக்கிறேன். இந்த பயணத்தின் மூலம் நான் பெற்றிருக்கும் அனுபவம் என்னவென்றால் 200 அல்ல, 234 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றிபெற போகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசார கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல், வர்த்தகரணி துணை செயலாளர் வி.பி.மணி, பகுதி செயலாளர் மதன்மோகன் உள்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலினுடன் பலரும் ஆர்வத்துடன் ‘செல்பி’ எடுத்து கொண்டனர்.