ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் தனுஷ்

‘அவென்ஜர்ஸ்’ இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் ஹாலிவுட் திரில்லர் திரைப்படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார்
சென்னை

நடிகர் தனுஷ் சகோதரர் செல்வராகவன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்கம் எனப் படிப்படியாக உயர்ந்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து உள்ளார். தற்போது மூன்றாவது பாலிவுட் படமான ‘அட்ரங்கி ரே’ படத்தில் நடித்து வருகிறார்.
கென் ஸ்காட் இயக்கிய சர்வதேச திரைப்படமான ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பாகிர்’ படத்திலும் அவர் நடித்துள்ளார், மேலும் அவரது நடிப்புக்கு விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றார்.

‘அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்’ இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் அந்தோனி மற்றும் ஜோவின் அடுத்த படமான ‘தி கிரே மேன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார்.’தி கிரே மேன்’ படத்தில் ரியான் கோஸ்லிங் (பிளேட் ரன்னர்) மற்றும் கிறிஸ் எவன்ஸ் (கேப்டன் அமெரிக்கா) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் மற்றும் அனா டி அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, மற்றும் ஜூலியா பட்டர்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

‘கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’, ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’ மற்றும் ‘எண்ட் கேம்’ உள்ளிட்ட திரைப்படங்களை அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ இயக்கி உள்ளனர்

இந்த செய்தியை டெட்லைன் என்கிற பிரபலமான ஹாலிவுட் செய்தி இணையதளம் பகிர்ந்துள்ளது. நெட்ஃபிலிக்ஸ் தரப்பும் இதை தங்களது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

திரில்லர் கதையான இந்தப் படத்தை நெட்பிலிக்ஸ் ஓடிடி தளம் தயாரிக்கிறது. இதுவரை நெட்பிலிக்ஸ் தயாரித்துள்ள படங்களில் இதுதான் அதிகபட்ச பட்ஜெட் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.