மழை காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் போட்டியை நடத்துகின்றனர் : சென்னை ரசிகர்கள் வேதனை

மழை காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் போட்டியை நடத்துகின்றனர் : சென்னை ரசிகர்கள் வேதனை

சென்னையில் தொடரும் மழையால் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி பாதிக்கப்படுமா?
சென்னை

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. 20 ஓவர் தெடாரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க சென்னை வந்த இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச போட்டியில் இந்திய அணி பங்கேற்றது. 2 ஆண்டுகளுக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டி என்பதால் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதால் போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த போட்டி பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

சென்னையில் இன்று சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்தது. சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் போட்டியில் கனமழை தொடர்ந்தால் போட்டி ரத்து செய்யப்படவோ அல்லது ஓவர்கள் குறைக்கப்படவோ வாய்ப்பு உள்ளது.

2 வருடங்களுக்கு பின் சென்னையில் இந்திய அணி விளையாடும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை பார்க்க ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்கு இது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சென்னையில் மழை காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் போட்டியை நடத்துகின்றனர் என்றும் ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சேப்பாக்கத்தில் கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியும் டிசம்பர் மாதத்தில் தான் நடைபெற்றது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )