பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி ‘சாம்பியன்’ இந்தியாவை வீழ்த்தியது

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி ‘சாம்பியன்’ இந்தியாவை வீழ்த்தியது

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மெல்போர்ன்,

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் பங்கேற்ற ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதின. லீக் ஆட்டங்கள் முடிவில் மூன்று அணிகளும் தலா 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. ‘ரன்-ரேட்’ அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் மெல்போர்னில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மெக் லானிங் 26 ரன் எடுத்தார். பெத் மூனி 54 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 71 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரை வீசிய இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி கெய்க்வாட் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 19 ரன்கள் தாரை வார்த்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டும், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியில், தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 10 ரன்னிலும், அறிமுக வீராங்கனை ரிச்சா கோஷ் 17 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 ரன்னிலும் வெளியேறினர். இதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனாவும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. அப்போது அணியின் வெற்றிக்கு 35 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இந்த சூழலில் மந்தனா (66 ரன், 37 பந்து, 12 பவுண்டரி) கேட்ச் ஆக, ஆட்டத்தின் போக்கு தலைகீழானது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதன் பிறகு மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி 20 ஓவர்களில் 144 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 11 ரன்வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

கடைசி 29 ரன்களுக்குள் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்தது கவனிக்கத்தக்கது. 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய இடக்கை சுழற்பந்துவீச்சு வீராங்கனை ஜெஸ் ஜோனஸ்சென் ஆட்டநாயகி விருது பெற்றார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )